ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது நியூஸிலாந்து…

 
Published : Jan 31, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது நியூஸிலாந்து…

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று முதல் வெற்றியை நியூஸிலாந்து பெற்றது.

ஆஸ்திரேலியாவின் 7-ஆவது பேட்ஸ்மேனான மார்கஸ் ஸ்டானிஸ் 117 பந்துகளில் 11 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 146 ரன்கள் குவித்தபோதும், கடைசி விக்கெட்டான ஜோஸ் ஹேஸில்வுட் ரன் அவுட்டானாதால் தோல்வி தவிர்க்க முடியாததானது.

ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் டாம் லதாம் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க வீரரான மார்ட்டின் கப்டில் 73 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் வந்தவர்களில் நீல் புரூம் 75 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 73, ஜேம்ஸ் நீஷம் 45 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்கள் குவித்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் மார்கஸ் ஸ்டானிஸ் 10 ஓவர்களில் 49 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச் 4, டிராவிஸ் ஹெட் 5, ஹேண்ட்ஸ்காம்ப் 7, ஷான் மார்ஷ் 16, மேக்ஸ்வெல் 20 ஓட்டங்களில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா 13 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஹீஸ்லெட்டுடன் இணைந்தார் மார்கஸ் ஸ்டானிஸ். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஹீஸ்லெட் 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, 18.2 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

இதன்பிறகு ஸ்டானிஸுடன் இணைந்தார் ஜேம்ஸ் ஃபாக்னர். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்க போராடியது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ஸ்டானிஸ், பின்னர் சற்று வேகமாக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்தார்.

சேன்ட்னர் வீசிய 32-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாசிய ஸ்டானிஸ் 64 பந்துகளில் அரை சதம் கண்டார்.

ஆஸ்திரேலியா 148 ஓட்டங்களை எட்டியபோது ஜேம்ஸ் ஃபாக்னர் ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து பட் கம்மின்ஸ் களமிறங்க, அதிரடி ஆரம்பமானது. கம்மின்ஸ், ஸ்டானிஸ் இருவரும் பவுண்டரிகளை பறக்கவிட, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது. 28 பந்துகளைச் சந்தித்த கம்மின்ஸ் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, மிட்செல் ஸ்டார்க் களம்புகுந்தார்.

அப்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற 9 ஓவர்களில் 91 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஜேம்ஸ் நீஷம் வீசிய 42-ஓவது ஓவரில் ஸ்டானிஸ் 3 சிக்ஸர்களை விளாச, அடுத்த ஓவரில் ஸ்டார்க் (3 ரன்கள்) ஆட்டமிழந்தார். அப்போது 43 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.

இதையடுத்து கடைசி விக்கெட்டாக ஜோஸ் ஹேஸில்வுட் களமிறங்கினார். ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட ஸ்டானிஸ், ஹேஸில்வுட்டுக்கு பேட் செய்யும் வாய்ப்பை வழங்கவில்லை.

அதேநேரத்தில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்டானிஸ், டிரென்ட் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரை விளாசி 96 பந்துகளில் சதத்தை எட்டினார். அடுத்த பந்திலும் சிக்ஸரை விளாசிய அவர், டிம் செளதி வீசிய 45-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டார்.

இதனால் கடைசி ஓவர்களில் 26 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்த்திய ஸ்டானிஸ், டிம் செளதி வீசிய 47-ஆவது ஓவரில் மேலும் இரு சிக்ஸர்களை விளாசினார். ஆனால் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஹேஸில்வுட் ரன் அவுட்டாக, ஆஸ்திரேலியா 280 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் நியூஸிலாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஸ்டானிஸ் 117 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்கள் குவித்தபோதும், ஆஸ்திரேலியா வெற்ற முடியாமல் போனது.

ஆஸ்திரேலியா கடைசி விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் சேர்த்தபோதும், அதில் ஹேஸில்வுட் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. அவர் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை.

நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சேன்ட்னர் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஸ்டானிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!