இந்திய அணிக்கு சுழற்பந்து பயிற்சியாளர்!! பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Sep 30, 2018, 3:04 PM IST
Highlights

இந்திய அணிக்கு ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இந்திய அணிக்கு ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வின், சோபிக்க தவறிவிட்டார். முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 

ஆடுகளத்தில் இருந்த ரஃப் பேட்சஸை சரியாக பயன்படுத்தி அஷ்வின் பந்துவீசவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அஷ்வின் அதை செய்ய தவறிய நிலையில், இங்கிலாந்து ஸ்பின்னர் மொயின் அலி, ரஃப் பேட்சஸில் சரியாக பந்துகளை வீசி இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்ததோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

அதனால் அஷ்வினின் பந்துவீச்சு மீது விமர்சனங்கள் எழுந்தன. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. 

அக்டோபர் 4ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்தவுடன், நவம்பர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அஷ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். அதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஸிபின் பவுலிங் பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க ஆலோசனைகள் நடந்துவருகின்றன. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்து ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆலோசனை நடத்தினார். அப்போது, ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் ஸ்பின் பவுலிங் ஆலோசகரை வைத்துள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்காரும் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் உள்ளனர். 
 

click me!