
ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டைச் சதமடித்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையை அசார் அலி பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 126.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி 364 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 58 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணி இன்னும் 165 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 101.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அசார் அலி 139, முகமது ஆமிர் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3-ஆவது நாளான புதன்கிழமை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர் மேலும் ஒரு ரன் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, சோஹைல் கான் களம்புகுந்தார். இதனிடையே மறுமுனையில் அசத்தலாக ஆடிய அசார் அலி 313 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். அசார் அலி-சோஹைல் கான் ஜோடி தொடர்ந்து சிறப்பாக ஆட, 121-ஆவது ஓவரில் 400 ரன்களை எட்டியது பாகிஸ்தான். r
அதிரடியாக ஆடிய சோஹைல் கான் 59 பந்துகளில் அரை சதமடிக்க, மதிய உணவு இடைவேளையின்போது 124 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 433 ஓட்டங்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய சோஹைல் கான் 65 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வஹாப் ரியாஸ் களமிறங்க, அசார் அலி 362 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார். இதன்பிறகு வஹாப் ரியாஸ் 1 ரன்னில் வெளியேற, டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். அப்போது அந்த அணி 126.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் குவித்திருந்தது. அசார் அலி 364 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் 205 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மெல்போர்ன் டெஸ்டில் 205 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டைச் சதமடித்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அசார் அலி. முன்னதாக 1972-73-இல் இதே மெல்போர்னில் மஜித் கான் 158 ஓட்டங்கள் எடுத்ததே பாகிஸ்தானியர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது.
வெளிநாட்டு அணிகளின் தொடக்க வீரர் ஒருவர் மெல்போர்ன் மைதானத்தில் இரட்டைச் சதமடிப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் 2003-04-இல் சேவாக் 195 ஓட்டங்கள் எடுத்திருந்ததே வெளிநாட்டு அணிகளின் தொடக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. இப்போது அதை அசார் அலி முறியடித்துள்ளார்.
ஓர் ஆண்டில் இரட்டைச் சதம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை இரு முறை எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும் அசார் அலி வசமாகியுள்ளது. ஓர் ஆண்டில் இரு முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விளாசிய 6-ஆவது தொடக்க வீரர் அசார் அலி ஆவார்.
சேவாக், கிரீம் ஸ்மித், அட்டப்பட்டு, கார்டன் கிரீனிட்ஜ், கிளன் டர்னர் ஆகியோர் மற்ற 5 பேர். மெல்போர்ன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைச் சதமடித்த வெளிநாட்டு வீரர் அசார் அலி ஆவார்.
அவருக்கு முன்னதாக விவியன் ரிச்சர்ட்ஸ் 208 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்த மைதானத்தில் அசார் அலியோடு சேர்த்து 4 வெளிநாட்டினர் இரட்டைச் சதமடித்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.