சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்ற போதிலும் அந்த அணியின் விக்னேஷ் புதூர் 3 விக்கெட் வீழ்த்தி சிஎஸ்கே வீரர்களுக்கு பயம் காட்டினார். யார் இந்த விக்னேஷ் புதூர் என விரிவாக பார்க்கலாம்.
IPL hero Vignesh Puthur! From auto rickshaw to cricket: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய சிஎஸ்கேவின் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
பவுலிங்கில் அசத்திய விக்னேஷ் புதூர்
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தாலும் போராடி தான் மேட்ச்சை விட்டுக் கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பவுலர் விக்னேஷ் புதூர். கேரள மாநிலத்தை சேர்ந்த விக்னேஷ் புதூர் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். சிஎஸ்கேவின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட், அதிரடி வீரர் ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா என 3 முக்கியமான விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.
சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தார்
மும்பை தோல்வியை தழுவினாலும் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்வதில் விக்னேஷ் புதூரின் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்தது. இடதுகை ஸ்பின்னரான விக்னேஷ் புதூரின் பவுலிங்கை சமாளிக்க சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்க்ள். ரச்சின் ரவிந்திராவை தவிர அவரது பவுலிங்கை மற்ற பேட்ஸ்மேனன்களால் அடிக்க முடியவில்லை. தனது சிறப்பான பவுலிங்கால் 23 வயதான விக்னேஷ் புதூர் இப்போது உலகம் முழுவதும் வைரலாகி விட்டார்.
'தல' தோனி தரிசனம் பார்த்த 30.5 கோடி பேர்! ரசிகர்களால் குலுங்கிய சேப்பாக்கம் மைதானம்!
யார் இந்த விக்னேஷ் புதூர்?
விக்னேஷ் புதூர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர். கேரளாவின் U14, U19 தொடரில் விளையாடாத அவர்
கேரள கிரிக்கெட் லீக் டி20 தொடரில் ஆலப்புழை ரிப்பில்ஸ் அணிக்காக விளையாடினார். அங்கு அவர் பெரிய அளவில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் அவரது பவுலிங் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், MI கேப்டவுன் அணிக்கு நெட் பௌலராக சென்றார் விக்னேஷ் புதூர்.
ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ்
அங்கு அவரது இடதுகை பவுலிங் ஆக்ஷன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வாளர்களை அதிகம் கவர்ந்தது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் விக்னேஷ் புதூரை ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. சென்னை சேப்பாக்கம் பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமானது என்பதால் முதல் போட்டியிலேயே அவர் மீது நம்பிக்கை வைத்து அணியில் எடுத்தனர். அதற்கேற்ப தனது முதல் போட்டிலேயே சிறப்பாக செயல்பட்டு அனைவரது கனவத்தையும் ஈர்த்து விட்டார் விக்னேஷ் புதூர்.
ஆட்டோ ஓட்டுநரின் மகன்
இவர் தமிழ்நாட்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறார். விக்னேஷ் புதூர் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளார் விக்னேஷ் புதூர். மும்பை இந்தியன் அணியை பொறுத்தவரை பிரதான ஸ்பின் பவுலராக மிட்ச்செல் சாண்ட்னர் இருக்கிறார். இப்போது அவருக்கு சப்போர்ட் செய்ய விக்னேஷ் புதூர் கிடைத்து விட்டார். இனி அனைத்து போட்டிகளிலும் விக்னேஷ் புதூர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் மும்பையை ஓட விட்டது எப்படி? சிஎஸ்கே வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!