இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆவது உறுதி.. கடைசி போட்டியிலும் ஆஸி., சொதப்பல் பேட்டிங்

First Published Jun 24, 2018, 4:50 PM IST
Highlights
australia worst batting in last odi against england


தொடர்ச்சியாக 4 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, கடைசி ஒருநாள் போட்டியிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடிவருகிறது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சீனியர் வீரர்களான அவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்தது.

முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 481 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை அடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை 242 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு வரலாற்று படுதோல்வியை பரிசாக வழங்கியது. நான்காவது போட்டியிலும் இங்கிலாந்தே வெற்றி பெற்றது. 

தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, கடைசி போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் இருந்தது. கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் 22 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஸ்டாய்னிஸ்(0), ஷான் மார்ஷ்(8), டிம் பெய்ன்(1) என வரிசையாக அவுட்டாகினர். 

அலெக்ஸ் கேரியும் ஷார்ட்டும் களத்தில் உள்ளனர்.  17 ஓவருக்கே 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. இங்கிலாந்து அணி இருக்கும் ஃபார்முக்கு 350 ரன்களுக்கு குறைவாக இலக்கு நிர்ணயித்தால், கண்டிப்பாக ஆஸ்திரேலியா தோற்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலியா ஆடுவதை பார்த்தால், பெரிய இலக்கை நிர்ணயிப்பது கடினம் தான். 

எனவே இந்த போட்டியிலும் தோற்று, இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆவது உறுதியாகிவிட்டது. 
 

click me!