கடைசி நேரத்தில் தனி ஒருவனாக போராடிய தினேஷ் கார்த்திக்கின் போராட்டம் வீண்!! பரபரப்பான போட்டியில் போராடி தோற்ற இந்தியா

By karthikeyan VFirst Published Nov 21, 2018, 5:49 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

தொடக்க வீரர் டார்ஷி ஷார்ட் 7 ரன்களில் கலீல் அகமதுவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஃபின்ச் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசிய கிறிஸ் லின்னை 37 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். அதன்பிறகு அவர் விட்டுச்சென்ற பணியை செவ்வனே தொடர்ந்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் அடித்து ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்த நிலையில், அந்த அணி 16.1 ஓவருக்கு 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. எஞ்சிய 5 பந்துகளில் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை இழந்து அந்த அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 17 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்களை எடுத்தது. இதையடுத்து டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வழக்கம்போல நிதானமாக தொடங்க, தவான் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக அடித்து ஆடினார். ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழக்க, தவான் அதிரடியை தொடர்ந்தார். 

பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்த தவான், தொடர்ந்து அடித்து ஆடினார். இதற்கிடையே ராகுல் வெறும் 13 ரன்களில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த கோலி வெறும் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து 42 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய தவானும் ஸ்டேன்லேக்கின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட்டும் தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து இலக்கை விரட்டினர்.

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 23 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தது. 20 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் அவுட்டாக ஆட்டம் விறுவிறுப்பானது. 4 ஓவருக்கு 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆண்ட்ரூ டை வீசிய 14வது ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பண்ட்டும் இணைந்து  25 ரன்களை குவித்தனர். இதையடுத்து கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. இதையடுத்து கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 16வது ஓவரில் ரிஷப் பண்ட் அவுட்டானார். அந்த ஓவரிலும் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த குருணல் பாண்டியா, இரண்டாவது பந்தில் ரன் எடுக்காமல், மூன்றாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனால் கடைசி மூன்று பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற கடினமான சூழல் உருவானது. பந்தை மெதுவாக வீசி தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை எடுத்தார் ஸ்டோய்னிஸ். இதையடுத்து இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

click me!