
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 4 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இலண்டனில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 44.3 ஓவர்களில் 182 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெறும் சூழலில் இருந்த நிலையில், மழை பெய்தது அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
வங்கதேசத்துக்கு எதிராக 36 ஓட்டங்கள் எடுத்தபோது ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அவர் தனது 93-ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
இதன்மூலம் அதிவேகமாக 4 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டேவிட்.
சர்வதேச அளவில் அதிவேகமாக 4 ஆயிரம் ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் 3-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் வார்னர். தென்
ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 81 இன்னிங்ஸ் 4 ஆயிரம் ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 88 இன்னிங்ஸ் 4 ஆயிரம் ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாது இடத்திலும் உள்ளனர்.
வரும் 10-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்கிறது ஆஸ்திரேலியா. அதில் வென்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.