
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, சைமோனா ஹேலப், நிஷிகோரி, மரின் சிலிச், எலினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்றைய ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே மற்றும் ரஷியாவின் கரீன் கச்சனோ மோதியதில் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கரீன் கச்சனோவை தோற்கடித்தார் ஆன்டி முர்ரே.
இந்த வெற்றியின்மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 650-ஆவது வெற்றியைப் பதிவு செய்தார் முர்ரே.
பிரெஞ்சு ஓபனில் 7-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் முர்ரே, அடுத்ததாக ஜப்பானின் கெய் நிஷிகோரியை சந்திக்கிறார்.
நிஷிகோரி தனது 4-ஆவது சுற்றில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவுடன் மோதியதில் 0-6, 6-4, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெர்டாஸ்கோவை தோற்கடித்தார் நிஷ்கோரி.
நிஷிகோரியும் 7-ஆவது முறையாக பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிகமுறை காலிறுதிக்கு முன்னேறிய ஜப்பானியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதேபோன்று குரோஷியாவின் மரின் சிலிச் தனது 4-ஆவது சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் மோதினார்.
இதில், 6-3, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிர்த்து விளையாடிய கெவின் ஆண்டர்சன் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதையடுத்து மரின் சிலிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் குரோஷிய வீரர் சிலிச் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் மற்றும் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் மோதியதில் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் கார்லா சுவாரெஸைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் சைமோனா ஹேலப்.
சைமோனா தனது காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை சந்திக்கிறார்.
முன்னதாக எலினா தனது முந்தைய சுற்றில் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சைத் தோற்கடித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.