நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து…

 
Published : Jun 07, 2017, 10:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து…

சுருக்கம்

england entered into semi finals as first team

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கார்டிஃப் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்தார் ஜோ ரூட். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இங்கிலாந்தின் ஸ்கோர் உயர ஆரம்பித்து பிறகு அதிரடியில் இறங்கிய ஜோ ரூட், சேன்ட்னர் வீசிய 18-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை வீசினார்.

இதனிடையே அலெக்ஸ் ஹேல்ஸ் 60 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 20-ஆவது ஓவரில் 100 ஓட்டங்களைக் கடந்தது இங்கிலாந்து.

அந்த அணி 118 ஓட்டங்களை எட்டியபோது அலெக்ஸ் ஹேல்ஸின் விக்கெட்டை இழந்தது. மில்னே பந்துவீச்சில் சிக்ஸரை விளாசிய கையோடு ஸ்டெம்பை பறிகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ். அவர் 62 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் வந்த கேப்டன் இயான் மோர்கன் 13 ஓட்டங்களில் நடையைக் கட்ட, பென் ஸ்டோக்ஸ் களம்புகுந்தார். இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 52 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு ஸ்டோக்ஸ் சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விளாச, ஆட்டம் விறுவிறுப்பானது.

இங்கிலாந்து அணி 188 ஓட்டங்களை எட்டியபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டு ஆனார் ஜோ ரூட். அவர் 65 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் ஜோஸ் பட்லர் களமிறங்க, பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களில் அரை சதத்தை நழுவவிட்டு 53 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார்.

பிறகு ஜோஸ் பட்லர் ஒருபுறம் அதிரடியாக ரன் சேர்க்க, மறுமுனையில் மொயீன் அலி, ஆதில் ரஷித் ஆகியோர் தலா 12 ஓட்டங்களில் வெளியேறினர். இதையடுத்து ஜோஸ் பட்லருடன் இணைந்தார் லியாம் பிளங்கெட். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர், மில்னே பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 41 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் இங்கிலாந்து அணி 300 ஓட்டங்ககளைக் கடந்தது.

இதன்பிறகு பிளங்கெட் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மார்க் உட், ஜேக் பால் ஆகியோர் டக் அவுட் ஆயினர்.

இறுதியில் 49.3 ஓவர்களில் 310 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து.

ஜோஸ் பட்லர் 61 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் லுக் ரோஞ்சி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே, ஜேக் பால் வீசிய முதல் ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் மார்ட்டின் கப்டிலுடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 62 ஓட்டங்கள் சேர்த்தது.

கப்டில் 33 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ராஸ் டெய்லர் களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 66 பந்துகளில் அரை சதம் கண்டார். அந்த அணி 30.2 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வில்லியம்சன் விக்கெட்டை இழந்தது. அவர் 98 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார்.

அவரைத் தொடர்ந்து ராஸ் டெய்லர் 39 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜேக் பால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணி சரிவுக்குள்ளானது. பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி 44.3 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு மொத்தமாக சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட் 4 விக்கெட்டுகளையும், ஜேக் பால், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஜேக் பால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்தின் இந்த வெற்றி அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையோடு இங்கிலாந்துக்கு பெற்றுத் தந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி