
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்றுத் தொடங்குகிறது.
மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களம் காணுகிறது.
மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நிலையில் களம் காணுகிறது இங்கிலாந்து.
இந்தப் போட்டியைப் பொருத்த வரையில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஜாக்சன் பேர்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல், பயிற்சியின்போது காயம் கண்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கையில் தொடர்ந்து வலி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனவே, அதன் தாக்கம் அவரது ஆட்டத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே, அணியின் பேட்ஸ்மேனான பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப், பிக் பாஷ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அணியின் பேட்டிங் வரிசையில் வார்னர், ஸ்மித் உள்ளிட்டோர் பலம் சேர்க்க, பந்துவீச்சுக்கு நாதன் லயன், ஹேஸில்வுட் ஆகியோர் உறுதுணையாக இருக்கின்றனர்.
இங்கிலாந்தைப் பொருத்த வரையில் அந்த அணியில் கிரெய்க் ஓவர்டன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் கியுரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
எஞ்சிய வீரர்களில் அலாஸ்டர் குக், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் மலான் ஆகியோர் அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவலாம்.
ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்சன் உள்ளிட்டோர் பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்த உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியின் விவரம்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பேன்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், நாதன் லயன், ஜாக்சன் பேர்ட்.
இங்கிலாந்து அணியின் விவரம்:
ஜோ ரூட் (கேப்டன்), அலாஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டாம் கியுரன், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்சன்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.