
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பாதையில் விளையாடி வருகிறது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி கொண்டிருக்கின்றன. இதில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணியின் வசம் 10 விக்கெட்டுகளும் உள்ள நிலையில், வெற்றிக்கு 56 ஓட்டங்களே தேவைப்படுகிறது. கடைசி நாளான இன்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்பது அனைவரின் கணிப்பு.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 116.4 ஓவர்களில் 302 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அதில், ஜேம்ஸ் வின்ஸ் 83 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 130.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்கள் எடுத்தது.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 26 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, சனிக்கிழமை முடிவில் 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 33 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நான்காவது நாள் ஆட்டத்தை ஸ்டோன்மேன் 19 ஓட்டங்கள், ஜோ ரூட் 5 ஓட்டங்களுடன் தொடங்கினர். இதில் ஸ்டோன்மேன் 27 ஓட்டங்கள், ஜோ ரூட் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த மொயீன் அலி 40 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோவ் 42 ஓட்டங்கள் எடுத்தனர்.
கிறிஸ் வோக்ஸ் 17 ஓட்டங்கள், ஸ்டூவர்ட் பிராட் 2 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, ஜேக் பால் கடைசி விக்கெட்டாக ஒரு ஓட்டத்திற்கு வீழ்ந்தார். இவ்வாறாக அந்த அணி 71.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹேஸில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், பட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 170 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவில் பேன்கிராஃப்ட் 51 ஓட்டங்கள், வார்னர் 60 ஓட்டங்களுடன் ஆடி வருகின்றனர். அதன் தொடர்ச்சி இன்று நடைபெறும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.