
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரர்களாக குக், மார்க் ஸ்டோன்மேன் ஆகியோர் களமிறங்கினர்.
ஐந்தாவது ஓவரின் 4-வது பந்தில் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார் குக். அப்போது அவர் 16 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதனையடுத்து, ஜேம்ஸ் வின்ஸ் களம் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஸ்டோன்மேனும் தடுப்பாட்டத்தை ஆடினார். அணி 89 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஹேஸில்வுட் பந்துவீச்சில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேம்ஸ் வின்ஸ்.
பின்னர், களம் புகுந்த கேப்டன் ஜோ ரூட் 20 ஓட்டங்களில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், அரை சதம் பதிவு செய்த ஸ்டோன்மேன், ஸடார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டேவிட் மலான், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை மலான் பதிவு செய்தார். அரை சதம் அடித்து பேர்ஸ்டோவும் அணியின் ஸ்கோரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் சென்றனர்.
இவ்வாறாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 305 ஓட்டங்கள் குவித்துள்ளது. 110 ஓட்டங்களுடன் மலானும், 75 ஓட்டங்களுடன் பேர்ஸ்டோவும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹேஸில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைகளை கைப்பற்றினர்.
ஆறு விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கவுள்ளது இங்கிலாந்து.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.