
தேசிய இளையோர் தடகளப் போட்டியில் அரியாணா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியது.
தமிழ்நாடு தடகளச் சங்கம், கோவை மாவட்ட தடகளச் சங்கம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து தேசிய அளவிலான 16-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான இளையோர் தடகளப் போட்டிகளை நடத்தின.
கோயம்புத்தூர், நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், நாடெங்கிலும் இருந்து 656 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அரியாணாவின் குர்பிரீத் 31 நிமிடம் 53:30 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார்.
மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பஞ்சாபின் சுமன் ராணி 17 நிமிடம் 02:67 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.
கம்பு ஊன்றித் தாண்டுதலில் உத்தரப் பிரதேசத்தின் தீரேந்திர குமார் முதலிடம் பிடித்தார்.
மகளிருக்கான மும்முறை தாண்டுதலில் தமிழகத்தின் பிரியதர்ஷினி சுரேஷ் முதலிடம் பிடித்தார்.
ஆடவருக்கான சங்கிலி குண்டு எறிதலில் ஆசிஷ் ஜாக்கர் முதலிடமும் பிடித்தனர்.
இந்தப் போட்டியில் அரியாணா 177.50 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் 151.50 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
இதில், ஆடவர் பிரிவில் 132.50 புள்ளிகளுடன் அரியாணா முதலிடமும், 77.50 புள்ளிகளுடன் தமிழகம் 2-ஆம் இடமும் பெற்றன.
மகளிர் பிரிவில் 91 புள்ளிகளுடன் மகாராஷ்டிர அணி முதலிடமும், 74 புள்ளிகளுடன் தமிழகம் 2-ஆம் இடமும் பிடித்தன.
சிறந்த தடகள வீரராக அரியாணாவைச் சேர்ந்த ஆசிஷ் ஜாக்கரும், சிறந்த வீராங்கனையாக ஜார்க்கண்டைச் சேர்ந்த சப்னா குமாரியும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கோவை மாவட்ட தடகள சங்கத் தலைவர், மருத்துவர் எல்.பி.தங்கவேலு தலைமை வகித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.