மும்பையிடமிருந்து வெற்றியை பறித்தை கௌதம்!! மீண்டும் ஒருமுறை போராடி தோற்ற மும்பை

First Published Apr 23, 2018, 9:56 AM IST
Highlights
rajasthan defeats mumbai indians


ஐபிஎல் 11வது சீசனில் மீண்டும் ஒரு தோல்வியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. நேற்று நடந்த 21வது லீக் போட்டியில் மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

4 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருந்த மும்பை அணி, நேற்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் லீவைஸ் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவுடன் இஷான் கிஷான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. அதிலும் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி பேட்டிங்கால் எதிரணியை மிரட்டினார். இருவரும் அரைசதம் கடந்தனர்.

சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷானின் அதிரடியால், 11வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது மும்பை அணி. இஷான் கிஷான் 58 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 72 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பொல்லார்டு, ரோஹித் சர்மா, குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா என யாருமே சரியாக ஆடாததால், 20 ஓவரின் முடிவில் மும்பை அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் திரிபாதி மற்றும் ரஹானே ஆகிய இருவரும் முறையே 9 மற்றும் 14 ரன்கள் அடித்து வெளியேறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.

ஒரு ரன்னை எல்லாம் இரண்டாக மாற்றினர். இந்த இணை அவசரப்படாமல், வெற்றியை நோக்கி நிதானமாக பயணித்தது. வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த இணையை உடைத்து ஹர்திக் பாண்டியா பிரேக் கொடுத்தார். பென் ஸ்டோக்ஸை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா. இதையடுத்து ஒரே ஓவரில் சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் பும்ரா ஒரு ரன் மட்டுமே கொடுத்தார்.

இதற்கு அடுத்த ஓவரில் கிளாசனின் விக்கெட்டை முஸ்தாபிஸர் வீழ்த்தினார். இதையடுத்து கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. 

களத்தில் கிருஷ்ணப்பா கௌதமும் ஆர்ச்சரும் இருந்தனர். 19வது ஓவரை பும்ரா வீசினார். பும்ராவின் இந்த ஓவரை கௌதம் அடித்து நொறுக்கினார். இக்கட்டான நிலையில் பும்ரா வீசிய 19வது ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டன.

இதையடுத்து கடைசி ஓவரில் 10 ரன்கள் என்ற நிலை உருவானது. கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, முதல் பந்திலேயே ஆர்ச்சரின் விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் அடுத்த மூன்று பந்திலேயே கௌதம் 10 ரன்களை அடித்து ராஜஸ்தானை வெற்றி பெற செய்தார்.

வெற்றியின் அருகில் நெருங்கிய மும்பை அணியிடமிருந்து வெற்றியை கிருஷ்ணப்பா கௌதம் பறித்துவிட்டார். தொடர் தோல்வியிலிருந்து பெங்களூருவை வீழ்த்தி மீண்ட மும்பை அணி, மீண்டும் போராடி தோல்வியடைந்துள்ளது. 

சென்னை, டெல்லி ஆகிய அணிகளிடம் போராடி தோற்ற மும்பை அணி, நேற்றும் அதேபோல் போராடி தோற்றது. ஆட்டநாயகனாக ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!