
கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் தடகளப் போட்டியில் அரியாணா அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற 18 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் ஈட்டி எறிதலில் தமிழகத்தின் என்.ஹேமமாலினி 45.26 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ராஜஸ்தானின் சஞ்சனா (43.10 மீ.), அஸ்ஸாமின் ருஞ்சுன் (43.02 மீ.) ஆகியோர் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர்.
20 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்தின் ஏ.நிஷாபானு 3.30 மீ. உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். கேரளத்தின் அஞ்சலி (3.05 மீ.), 2-ஆவது இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் மஹி படேல் (2.90 மீ.) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
18 வயதுக்குள்பட்டோருக்கான ஆடவர் நீளம் தாண்டுதலில் கேரளத்தின் ஸ்ரீசங்கர் 7.52 மீ. தூரம் தாண்டி முதலிடத்தையும், தமிழகத்தின் எம்.மகேஷ் (6.95 மீ.) 2-ஆவது இடத்தையும், அரியாணா வின் அனில் குமார் (6.94 மீ) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
20 வயதுக்குள்பட்ட மகளிருக்கான 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் ஜார்க்கண்டின் அனுரூபா (14.30 விநாடிகள்) முதலிடத்தையும், தமிழகத்தின் சி.கனிமொழி (14.48 விநாடிகள்) 2-ஆவது இடத்தையும், மகாராஷ்டிரத்தின் அங்கிதா (14.51 விநாடிகள்) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குள்பட்ட மகளிருக்கான டிரையத்லான் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜே.கோல்சியா முதலிடம் பிடித்தார். இவர் நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளி மாணவியாவார்.
22 மாநில அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் 2-ஆவது நாளின் முடிவில் அரியாணா அணி 134 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம், கேரள அணிகள் முறையே 102, 98 புள்ளிகளுடன் 2 மற்றும் 3-ஆவது இடங்களிலும், தமிழகம் 80 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.