மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த அமன் செராவத் புதிய சாதனை!

By Rsiva kumar  |  First Published Aug 10, 2024, 2:12 AM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் செராவத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் இந்தியா 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து வெளியேறினர். நீச்சல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், பளுதூக்குதல், ரோவிங், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை.

வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கொடுத்திருக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!

Latest Videos

undefined

துப்பாக்கி சுடுதல், ஹாக்கி மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வென்றது. மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் எலிமினேஷன் சுற்று முதல் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தார். ஆனால், கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்த எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செராவத் மசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவ்வை எலிமினேஷன் சுற்று போட்டியில் எதிர்கொண்டார். இதில், செராவத் 10-0 என்று புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அல்பானியா நாட்டைச் சேர்ந்த ஜெலிம்கான் அர்செனோவிச் அபகரோவ்வை எதிர்கொண்டார்.

மாதவிடாய் காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை இழந்தேன் – பளூதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு!

இந்தப் போட்டியில் செராவத் 12-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரே ஹிகூச்சியை எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஹிகூச்சி 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றார். 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த அமன் செராவத் வெண்கலப் பதக்க வாய்ப்பிற்கு தகுதி பெற்றார். இதில் போர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த டேரியன் டோய் குரூஸை எதிர்கொண்டார். நேற்று இரவு 10.45 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் அமன் செராவத் 13-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 103 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம், 74 பதக்கங்களுடன் சீனா 2ஆவது இடம்!

இதன் மூலமாக இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரராக அமன் செராவத் சாதனை படைத்துள்ளார். அமன் செராவத் 21 வயது 24 நாட்களில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதே போன்று பிவி சிந்து 21 வயது ஒரு மாதம் மற்றும் 14 நாட்களில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும், விஜேந்தர் சிங் 22 வயது 9 மாதம் மற்றும் 24 நாட்களில் பீஜிங் ஒலிம்பிக் தொடர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 23 வயது 7 மாதம் மற்றும் 14 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியா 5 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றி தற்போது பதக்கப் பட்டியலில் 69ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!