
"எனது ஆட்டத்தில் தற்போது வரையில் பெரிதாகக் கூறக்கூடிய வகையில் எந்தவொரு பின்னடைவுகளும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று நடால் கூறினார்.
காயம் காரணமாக நடால் 2016-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2-ஆவது சுற்றிலேயே விலகியதை தொடர்ந்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. எனினும், ரியோ ஒலிம்பிக்கிற்கு மீண்டு வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நடால், அதில் ஃபெடரரிடம் தோல்வி கண்டார்.
எனினும், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ், பார்சிலோனா ஓபன், மாட்ரிட் ஓபன் ஆகியவற்றில் அடுத்தடுத்து பட்டம் வென்ற உத்வேகத்துடன் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் களம் காண உள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்கும் நடால் கூறியது:
“2016 பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஏனெனில், அந்தப் போட்டியில் எனது இடது கை மணிக்கட்டுப் பகுதியை ஏறத்தாழ சிதைத்துக் கொண்டேன். காயம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தபோதும் முடிந்த வரையில் விளையாடிட முயற்சித்தேன்.
இன்று செய்துவிட முடியும் என்பது போல் தோன்றுவதை, அடுத்த நாள்களில் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதைப் போல், போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தேன்.
தொடர்ந்து விளையாட முடியாது என்ற நிலை எனது கைக்கு ஏற்படும் வரையில் விளையாடினேன். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டில் அனைத்துமே சிக்கல் நிறைந்தவையாகவே இருந்தன.
இந்த நிலையில், மீண்டும் இந்த சீசனில் களம் காண்கிறேன். எனது ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் மேம்பட்டு வருகின்றன. அதேபோல சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறேன்.
தற்போது வரையில் பெரிதாகக் கூறக்கூடிய வகையில் எந்தவொரு பின்னடைவுகளும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று நடால் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.