முடிவுக்கு வருகிறது முரளி விஜயின் கிரிக்கெட் வாழ்க்கை..?

By karthikeyan VFirst Published Aug 25, 2018, 3:55 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ தொடக்க வீரர் முரளி விஜயின் கிரிக்கெட் வாழ்க்கை அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக முன்னாள் பவுலர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ தொடக்க வீரர் முரளி விஜயின் கிரிக்கெட் வாழ்க்கை அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக முன்னாள் பவுலர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காவிட்டாலும் டெஸ்ட் அணியில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் நிரந்தர தொடக்க வீரராக இருந்து வந்தார். தற்போது இங்கிலாந்து தொடரில் சரியாக ஆடாததால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது. 

2008ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முரளி விஜய், கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறார். 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3,907 ரன்களை குவித்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறப்பாகவே ஆடிவந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் சரியாக ஆடவில்லை. இந்திய அணிக்கு பலமுறை சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார் முரளி விஜய். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார் முரளி விஜய். அதுவும் அந்த 26 ரன்களும் முதல் டெஸ்டில் எடுக்கப்பட்டதாகும். இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட்டானார். 

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் சேர்க்கப்பட்டார். மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், முரளி விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பவுலர் அஜித் அகார்கர், அணியிலிருந்து நீக்கப்பட்ட எந்த ஒரு வீரரும் மீண்டும் அணியில் சேர்க்கப்படவே மாட்டார் என்று கூற முடியாது. ஆனால் முரளி விஜய் மீண்டும் டெஸ்ட் அணியில் நிரந்தர வீரராக இடம்பிடிப்பது கடினமான விஷயம். ஏனென்றால் அணியில் சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர் பிரித்வி, தனது திறமையை நிரூபித்து அணியில் தன்னை தக்கவைக்க விரும்புவார் என்பதால், கடும் போட்டிகளுக்கு இடையே மீண்டும் விஜய் அணியில் இடம்பிடிப்பது கடினம் என அகார்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!