போட்டி டிரா ஆனது போயிட்டு போகுது.. இந்தியாவிடம் ரஷீத் கான் செய்த செம சம்பவத்த பாருங்க

By karthikeyan VFirst Published Sep 26, 2018, 9:28 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

ரஷீத் கான் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக வலம்வருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தலாக செயல்பட்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறார். 

ஆசிய கோப்பை தொடரில் ரஷீத் கான் சிறப்பாக ஆடி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த போட்டிகளில் ரஷீத் கானின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி நெருக்கடி கொடுத்து போராடித்தான் தோற்றது. இந்த போட்டிகளிலும் ரஷீத் கான் சிறப்பாக செயல்பட்டார்.

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் ரஷீத் கான் சிறப்பாக பந்துவீசினார். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திடம் போராடி தோல்வியை தழுவிய ஆஃப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் போராடி போட்டியை டிரா செய்தது. இதற்கு ரஷீத் கான் தான் காரணம். கடைசி ஓவரில் ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை பறித்தார்.

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் ராயுடுவும் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தனர். எனினும் தோனி, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்திய அணி கடைசி நேரத்தில் போராட வேண்டியதாயிற்று. களத்தில் நிலைத்து நின்று அரைசதத்தை நெருங்கிய தினேஷ் கார்த்திக், அம்பயரின் தவறான முடிவால் வெளியேறினார். 

சாஹர், கவுல் என விக்கெட்டுகள் சரிய 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை. கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க பவுண்டரி லைனிற்கு சற்று முன் பந்து பிட்ச் ஆகியதால் பவுண்டரி ஆனது. அடுத்து மூன்று ரன்கள் தேவைப்பட, ஜடேஜா ஒரு ரன்னும் கலீல் ஒரு ரன்னும் எடுத்தனர். 5வது பந்தில் ஜடேஜா பேட்டிங் முனைக்கு வந்தார். 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.

உச்சகட்ட நெருக்கடியான சூழலில் அந்த பந்தை ரஷீத் வீசினார். ஆனால் ஜடேஜா அதை தூக்கி அடித்து அவுட்டானார். இதையடுத்து போட்டி டிரா ஆனது. கடைசி ஓவரில் 7 ரன் என்பது அடிக்கக்கூடிய ரன். ஆனாலும் ஜடேஜா தேவையில்லாத ஷாட் ஆகி அவுட்டானார். நெருக்கடியான நிலையில் கடைசி ஓவரை அருமையாக வீசி போட்டியை டிரா செய்தார் ரஷீத் கான்.

இதன்மூலம் கடைசி ஓவரில் எதிரணியின் வெற்றிக்கு 10 ரன்களுக்கு குறைந்த ரன்னே தேவை என்ற நிலையில், அதை எடுக்கவிடாமல் தடுக்க ஸ்பின்னர்களில் ரஷீத் கான் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெறும் 7 ரன்னை எடுக்கவிடாமல் 6 ரன் மட்டுமே கொடுத்து போட்டியை டிரா செய்ய உதவிய ரஷீத், இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியை கடைசி ஓவரில் 6 ரன்னை எடுக்கவிடாமல் தடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் ஆர்த்துர்டான் முதலிடத்தில் உள்ளார்.
 

click me!