உச்சகட்ட பரபரப்பு.. கடைசிவரை போராடிய ஆஃப்கானிஸ்தான்!! வெற்றி பெற வேண்டிய போட்டியில் சொதப்பிய இந்தியா

By karthikeyan VFirst Published Sep 26, 2018, 8:26 AM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் போராடி டிரா செய்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் போராடி டிரா செய்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுடன் நேற்று மோதியது. இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ராகுல், மனீஷ் பாண்டே, சித்தார்த் கவுல், தீபக் சாஹர், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அஹ்மதி(5), ரஹ்மத் ஷா(3), ஷாகிடி(0), அஸ்கர் ஆஃப்கான்(0) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் அந்த அணியின் தொடக்க வீரர் ஷேஷாத் மட்டும் சிறப்பாக ஆடினார். குல்பாதின் நைப் 15 ரன்களில் அவுட்டானார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ஷேஷாத் அபாரமாக ஆடினார். அபாரமாக ஆடிய ஷேஷாத் சதமடித்தார். மிகச்சிறப்பாக ஆடிய ஷேஷாத் 124 ரன்கள் குவித்து கேதர் ஜாதவ் பவுலிங்கில் அவுட்டானார். அதேபோல முகமது நபியும் அபாரமாக ஆடி அரைசதம் கடந்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அ 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்  ஆஃப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியிலும் 250 ரன்களுக்கு மேல் எடுத்துவிடுகிறது. இதையேதான் இந்திய அணிக்கு எதிராகவும் அந்த அணி செய்தது.

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின்  தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் ராயுடு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 110 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 60 ரன்களிலும் ராயுடு 57 ரன்களிலும் அவுட்டாகினர். அதன்பிறகு தோனி மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் தலா 8 ரன்களில் அவுட்டாகினர். தோனிக்கு அவுட்டே இல்லாததை எல்பிடபிள்யூ கொடுத்ததால், அம்பயரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். ரிவியூ இல்லாததால் தோனி களத்திலிருந்து வெளியேறினார்.

கேதர் ஜாதவ் 19 ரன்களிலும் தீபக் சாஹர் 12 ரன்களிலும் அவுட்டாகினர். குல்தீப் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய இருவரும் ரன் அவுட்டாகினர். 9 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட நிலைமை மோசமடைந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழ மறுமுனையில் ஜடேஜா களத்தில் நின்றார். கடைசி மூன்று ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ரஷீத் கான் வீசிய 48வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அஃப்டாப் வீசிய 49வது ஓவரில் 4 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை ரஷீத் கான் வீசினார். ஆஃப்கானிஸ்தானின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க பவுண்டரி லைனிற்கு சற்று முன் பந்து பிட்ச் ஆகியதால் பவுண்டரி ஆனது. அடுத்து மூன்று ரன்கள் தேவைப்பட, ஜடேஜா ஒரு ரன்னும் கலீல் ஒரு ரன்னும் எடுத்தனர். போட்டி டிரா ஆன நிலையில், வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் ஜடேஜா தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து போட்டி டிரா ஆனது. வெற்றி பெற வேண்டிய போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. 

 

click me!