
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
முதல் போட்டியில் 211 ரன்கள் அடித்தும் கூட, 212 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. 2வது போட்டியில் 148 ரன்கள் மட்டுமே அடித்ததால், 149 ரன்கள் என்ற எளிய இலக்கை எளிதாக விரட்டி தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றுவிட்டது.
இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பவுலிங் சரியில்லை என்பதுபோக, மேலும் ஒரு பொதுவான பலவீனம் உள்ளது. அதைத்தான் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஜாகீர் கான். பார்ட்னர்ஷிப் அமையும்போது இந்திய அணி மனம்தளர்ந்துவிடுகிறது. முதல் போட்டியில் மில்லர் - வாண்டர் டசன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய நிலையில், அந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 2வது போட்டியில் கிளாசன் - மில்லர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போதும் இந்திய அணி மனம்தளர்ந்தது.
அதை சுட்டிக்காட்டி பேசியுள்ள ஜாகீர் கான், பார்ட்னர்ஷிப் பில்ட் ஆகும்போது, இந்திய அணி மனம் தளர்கிறது. இதை களத்தில் அப்பட்டமாக பார்த்தோம். இதை ராகுல் டிராவிட் & கோ சரி செய்ய வேண்டும். 3வது டி20 போட்டிக்கு முன் ஒரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது. அந்த ஒருநாளில் வீரர்களை ஒருங்கிணைத்து கடினமான உரையாடல்களை நிகழ்த்தி, 40 ஓவர்கள் மனம் தளராமல் போராடும் உணர்வை வளர்க்க வேண்டும் என்று ஜாகீர் கான் கருத்து கூறியுள்ளார்.