அன்றைக்கே என்னோட கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சுதுனு நெனச்சேன்!! ஆனால் ஒன்றரை வருஷம் கழிச்சு செம கம்பேக் கொடுத்தேன்.. மனம் திறந்த யுவராஜ்

By karthikeyan VFirst Published Jun 10, 2019, 4:45 PM IST
Highlights

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. அபாரமாக ஆடி பாராட்டை பெற்றதை போலவே சில மோசமான சம்பவங்களும் உள்ளன. ஆனால் அவற்றில் இருந்து எல்லாம் மீண்டு வந்தார் யுவராஜ் சிங்.
 

கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமான யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், இன்று தனது ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். செய்தியாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்தார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. அபாரமாக ஆடி பாராட்டை பெற்றதை போலவே சில மோசமான சம்பவங்களும் உள்ளன. ஆனால் அவற்றில் இருந்து எல்லாம் மீண்டு வந்தார் யுவராஜ் சிங்.

அப்படியொரு சம்பவத்தைத்தான், ஓய்வு அறிவிப்பின்போது பகிர்ந்துகொண்டார். அதுகுறித்து பேசிய யுவராஜ், 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 21 பந்துகள் ஆடி வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தேன். என் கெரியரில் மோசமான தருணம் அது. அத்துடன் எனது கெரியர் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் பின்னர், நான் ஏன் கிரிக்கெட் ஆடுகிறேன் என்று யோசித்து பார்த்தேன். கிரிக்கெட் மீதுள்ள தீராத காதலாலும் பற்றாலும் தான் நான் கிரிக்கெட் ஆடுகிறேன்.  எனவே நான் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என நினைத்தேன். உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி மீண்டும் கம்பேக் கொடுத்தேன் என்றார். 
 

click me!