நீங்க என்னதான் நெனச்சுகிட்டு இருக்கீங்க..? கோலி, சாஸ்திரியை தலை தெறிக்கவிட்ட யுவராஜ் சிங்

By karthikeyan VFirst Published Jul 14, 2019, 2:21 PM IST
Highlights

லீக் போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடியதால் மிடில் ஆர்டர் சிக்கலால் இந்திய அணிக்கு பாதிப்பில்லாமல் இருந்தது. ஆனால் அரையிறுதியில் டாப் ஆர்டர்கள் சரியாக ஆடாததால், மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங்கால் இந்திய அணியை காப்பாற்ற முடியவில்லை. 
 

உலக கோப்பையில் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய பின்னர், உலக கோப்பைக்கு முன்னதாக விவாதக்களமாக இருந்துவந்த நான்காம் வரிசை வீரர் விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 240 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, தொடரை விட்டு வெளியேறியது. 

லீக் போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடியதால் மிடில் ஆர்டர் சிக்கலால் இந்திய அணிக்கு பாதிப்பில்லாமல் இருந்தது. ஆனால் அரையிறுதியில் டாப் ஆர்டர்கள் சரியாக ஆடாததால், மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங்கால் இந்திய அணியை காப்பாற்ற முடியவில்லை. 

இந்திய அணி நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று உறுதி செய்து, கடைசி நேரத்தில் கழட்டிவிட்டு விஜய் சங்கரை எடுத்தது. விஜய் சங்கரும் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட்டை அந்த வரிசையில் இறக்கிவிட்டது. நான்காம் வரிசைக்கு நிரந்தர தேர்வைக்காண இந்திய அணி நிர்வாகம் முயலவேயில்லை. உலக கோப்பையில் நான்காம் வரிசையில் ஆடுவது யார் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அதையும் சரியாக செய்யவில்லை. 

எதிர்காலத்தில் முக்கியமான அந்த வரிசையில் யார் இறங்கப்போவது என்பதை இந்திய அணி நிர்வாகம், தேடி கண்டுபிடித்து உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிகரமான நான்காம் வரிசை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். 

அதில் இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், உலக கோப்பையை மனதில்வைத்து நான்காம் வரிசை வீரரை உறுதி செய்திருக்க வேண்டும். 4ம் வரிசை மிகவும் முக்கியமானது. அந்த வரிசையில் ஆடும் வீரர் ஒரு சில இன்னிங்ஸ்களில் சொதப்பிவிட்டால் அவரை கழட்டிவிடக்கூடாது. அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் தான் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறீர்கள். எனவே கவனமாக ஆடுங்கள் என்று நம்பிக்கையளித்திருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் ராயுடுவை நீக்கிவிட்டார்கள். 

ராயுடு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரை தொடர்ந்து அணியில் எடுக்கப்பட்டு, நன்றாகத்தானே ஆடினார். ஆனால் அவரை கடைசி நேரத்தில் கழட்டிவிட்டார்கள். எல்லாருக்கும் ஒருசில மோசமான இன்னிங்ஸ்கள் அமையத்தான் செய்யும். அதற்காகவெல்லாம் கழட்டிவிடக்கூடாது. ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அவுட்டாகிவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்துவிடலாம் என்பது தெரிந்து எதிரணிகள் செயல்பட்டார்கள். இனிவரும் கால்ங்களில் நமக்கு நிரந்தரமான சிறந்த நான்காம் வரிசை வீரர் ஒருவர் தேவை. அதற்கு அணி நிர்வாகம் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 
 

click me!