எங்கப்பா அந்த செலக்‌ஷன் கமிட்டியும் கோலியும்..? ஓரங்கட்டியவர்களுக்கு தக்க பாடம் புகட்டிய அஷ்வின்.. தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Jul 14, 2019, 2:15 PM IST
Highlights

கோலி கேப்டனான பிறகு களையெடுக்கப்பட்ட முக்கியமான வீரர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், கோலி கேப்டனானதும் அவர்கள் இருவருமே ஓரங்கட்டப்பட்டு ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் அணியில் எடுக்கப்பட்டனர். 

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறிய நிலையில், இந்திய அணியை மறு சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அனைத்து வகையிலும் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியாக உலக கோப்பைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைவிட தங்களது விசுவாசிகளுடன் உலக கோப்பைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அணி தேர்வு இருந்ததாக தெரிகிறது. 

கோலிக்கு நெருங்கியவர்களான ராகுலும் சாஹலும் சரியாக ஆடவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளிலும் ஆடும் லெவனில் இருந்தார்கள். அவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் ஓரங்கட்டுவதே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தன்னிச்சையாகவே செயல்பட்டு பல முடிவுகளை எடுத்துள்ளனர். அந்த முடிவுகள் நேர்மறையான விளைவுகளை தரவில்லை என்பதால், அவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. 

கோலி கேப்டனான பிறகு களையெடுக்கப்பட்ட முக்கியமான வீரர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், கோலி கேப்டனானதும் அவர்கள் இருவருமே ஓரங்கட்டப்பட்டு ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் அணியில் எடுக்கப்பட்டனர். அதன்பின்னர் அஷ்வின் அப்படியே ஓரங்கட்டப்பட்டார். ஆனால் ஜடேஜா ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்சால் அணியில் மீண்டும் இணைந்தார். 

குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி அணியில் இணைந்த புதிதில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். ஆனால் உலக கோப்பையில் இருவருமே மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க தவறிவிட்டனர். நிறைய ஸ்பின்னர்கள் புதிதாக வந்தபோது சுழலில் மிரட்டுவார்கள். அவர்களது கையசைவுகளையும் வேரியேஷன்களையும் எதிரணி பேட்ஸ்மேன்கள் கண்டுபிடித்த பிறகு அவர்களது பருப்பு வேகாது. அப்படி காலப்போக்கில் வேகாத பருப்பானவர்கள் தான் குல்தீப்பும் சாஹலும். 

ஆனால் அஷ்வின் என்றுமே தரமான ஸ்பின்னர் தான். ஆஃப் ஸ்பின்னரோ ரிஸ்ட் ஸ்பின்னரோ, தரமான ஸ்பின்னர் என்றுமே தரமான ஸ்பின்னர் தான் என்று கம்பீர் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த கருத்தை வலியுறுத்தி உலக கோப்பை அணியில் அஷ்வினை சேர்க்க வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அஷ்வின் தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டார். 

இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி உலக கோப்பையில் சோபிக்கவில்லை. இந்திய அணியும் அரையிறுதியில் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. இந்நிலையில் தன்னை புறக்கணித்த இந்திய அணியின் தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்திற்கு தனது திறமையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் அஷ்வின். 

இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஆடிவரும் அஷ்வின், கவுண்ட் போட்டிகளில் அசத்திவருகிறார். சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை 240 ரன்களுக்கு சுருட்ட காரணமாக இருந்தார். 

அணிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே குல்தீப்பும் சாஹலும் காலாவதி ஆகிவிட, நீண்ட  அனுபவம் கொண்ட அஷ்வின் இன்னும் தனது சுழலில் அசத்திவருகிறார். ரிஸ்ட் ஸ்பின், ஆஃப் ஸ்பின் என்பதை கடந்து தரமான ஸ்பின்னர் என்றுமே தரமான ஸ்பின்னர் தான் என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் புரிந்துகொள்ள வேண்டும்.
 

click me!