ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12ஆவது இடம் பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிவில் யஷஸ்வி ஜெஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முறையே, 80, 15, 209, 17, 10, 214, 73, 37 என்று மொத்தமாக 655 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 12 ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 744 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறார். ஜெய்ஸ்வால் 727 புள்ளிகளுடன் 12ஆவது இடம் பிடித்துள்ளார். கடைசி போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்தால் விராட் கோலியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மா 720 புள்ளிகளுடன் 13 ஆவது இடத்திலும் இருக்கிறார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்!
இதே போன்று டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ரா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவர், 867 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 846 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் இருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜா 785 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலிருக்கிறார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் முதல் 5 இடங்களுக்குள் இருக்கின்றனர். அதில், ரவீந்திர ஜடேஜா 449 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 323 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் இருக்கின்றனர். அக்ஷர் படேல் 275 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் இருக்கிறார்.