WTC Final: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன்! முதல் ஐசிசி கோப்பையை வென்று அசத்தல்!

Published : Jun 14, 2025, 05:16 PM ISTUpdated : Jun 14, 2025, 05:37 PM IST
WTC Final AUS vs SA

சுருக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பஅற்றியுள்ளது. இதன்மூலம் முதல் ஐசிசி கோப்பையை வென்று பல ஆண்டுகால கனவை தென்னாப்பிரிக்கா நனவாக்கியுள்ளது.

WTC Final 2025: South Africa Beat Australia to Win First ICC Trophy: ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் (66 ரன்கள்), பியூ வெப்ஸ்டர் (72 ரன்கள்) ஆகியோர் அரை சதம் விளாசினார்கள். தென்னாப்பிரிக்கா தரப்பில் கசிசோ ரபாடா 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்

பின்பு தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியும் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். மிட்ச்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் உஸ்மான் கவாஜா(6), கேமரூன் கிரீன் (0), மார்னஸ் லபுஸ்சேன் (22), ஸ்டீவ் ஸ்மித் (13), டிராவிஸ் ஹெட் (9), வெப்ஸ்டர் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் 148/9 என தள்ளாடியது.

ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய மிட்ச்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட்

பின்பு ஜோடி சேர்ந்த மிட்ச்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக திகழ்ந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ராபாடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் சாய்த்தனர். இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா

282 ரன்கள் எடுத்தால் முதல் ஐசிசி கோப்பையை வெல்லலாம் என களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்னில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ரியான் ரிக்கல்டன் 6 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேரியிடம் கேட்ச் ஆனார். பின்பு களமிறங்கிய முல்டர் 27 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். அப்போது தென்னாப்பிரிக்கா 70/2 என்ற நிலையில் இருந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினர்.

மார்க்ரம் சதம் விளாசினார்

அவருடன் கேப்டன் டெம்பா பவுமாவும் இணைந்து சூப்பராக விளையாடினார். மார்க்கரம் அதிரடியாக பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். பவுமா நிதானமாக விளையாடினார். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் என அனைத்து பவுலர்களும் பந்துவீசியும் கடைசி வரை இவர்கள் இருவரையும் அவுட் ஆக்க முடியவில்லை. அதிரடியாக விளையாடிய மார்க்ரம் சூப்பர் சதம் விளாசினார். கேப்டன் பவுமாவும் அரை சதம் அடித்தார். நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழந்து 213 ரன்கள் எடுத்திருந்தது.

பவுமா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அடுத்தடுத்து அவுட்

மார்க்ரம் 159 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், பவுமா 121 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெற்றி பெற மேற்கொண்டு 69 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் மார்க்ரம், பவுமா பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள். ஆனால் தொடக்கத்திலேயே பவுமா (66 ரன்) கம்மின்ஸ் பந்தில் கேரியிடம் கேட்ச் ஆனார். பின்பு வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் (8 ரன்) ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டானார்.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

அப்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 241/4 என்ற நிலையில் இருந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் மார்க்ரம் சூப்பராக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் பெடிங்ஹாமும் பொறுப்புடன் விளையாடினார். தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கிய நேரத்தில் மார்க்ரம் (207 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள்) ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். மறுபக்கம் டேவிட் பெடிங்ஹாம் சிறப்பாக விளையாட தென்னாப்பிரிக்கா அணி 84 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது.  சூப்பர் சதம் விளாசிய மார்க்ரம் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதுதான் தென்னாப்பிரிக்காவின் முதல் ஐசிசி கோப்பை

கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா வீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி முதன் முறையாக ஐசிசி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அந்த அணியின் 27 ஆண்டு கால கோப்பையின் தாகம் தணிந்துள்ளது.  தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா இந்த சரித்திர சாதனையை செய்து காட்டியுள்ளார். மேலும் இதுவரை பைனலில் தோற்றதில்லை என்ற பெருமையையும் பவுமா பெற்றுள்ளார். முதல் ஐசிசி கோப்பையை வென்றுள்ளதால தென்னாப்பிரிக்க அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?
3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்