ஓவரா புகழ்ந்தே அவரை ஓய்ச்சு கட்டிட்டாங்க.. ஜடேஜாவை செம கடுப்பாக்கிய சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published Oct 4, 2019, 12:08 PM IST
Highlights

இந்தியா -  தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் 4 விக்கெட்டுகளை இந்திய அணி எளிதில் வீழ்த்திவிட்ட நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு எல்கரும் டுப்ளெசிஸும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவரும் நிலையில், விக்கெட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கும் நிலையில், விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா பெரிய தவறிழைத்துவிட்டார். 

விசாகப்பட்டினத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிய 20 ஓவர்கள் இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம், டி பிருய்ன் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் அஷ்வின். அடுத்ததாக நைட் வாட்ச்மேனாக அனுப்பப்பட்ட டேன் பீட்டை அஷ்வின் வீழ்த்த, அதன்பின்னர் எல்கருடன் பவுமா ஜோடி சேர்ந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பவுமாவை இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் டீன் எல்கர் நங்கூரமிட்டு நிலைத்து ஆடினார். அவருக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்காமல் அவுட்டாகிவந்த நிலையில், பவுமாவின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த கேப்டன் டுப்ளெசிஸ், எல்கருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். 

எல்கர் அரைசதம் அடிக்க, மறுமுனையில் டுப்ளெசிஸ் ஸ்பின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். அஷ்வின் பவுலிங்கை ஸ்வீப் ஷாட்டின் மூலம் சில பவுண்டரிகளை அடித்தார் டுப்ளெசிஸ். எல்கர் - டுப்ளெசிஸ் ஜோடி சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய பவுலர்கள் இருந்த நிலையில், ஜடேஜா வீசிய பந்தில் வீழ்த்திருக்க வேண்டியவர் எல்கர். 

ஜடேஜா வீசிய பந்து ஒன்று எல்கரின் பேட்டில் அவுட்செட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் சஹாவிடம் சென்றது. ஆனால் சஹா அதை பிடிக்காமல் தவறவிட்டார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், சிறந்த விக்கெட் கீப்பர் தேவை என்பதன் அடிப்படையில்தான் ரிஷப் பண்ட் உட்கார வைக்கப்பட்டு சஹா எடுக்கப்பட்டார். ஆனால் எதற்காக எடுக்கப்பட்டாரோ அந்த காரியத்தையே கெடுத்துவிட்டார். சஹா உலகத்தரம் வாய்ந்த சிறந்த விக்கெட் கீப்பர் தான். அதனால் ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டதால் அவரது விக்கெட் கீப்பிங் திறமையை சந்தேகிக்கமுடியாது. ஆனாலும் முக்கியமான நேரத்தில் முக்கியமான வீரரின் கேட்ச்சை கோட்டைவிட்டார். 

எல்கர் ஏற்கனவே அரைசதம் கடந்துவிட்ட நிலையில், சஹா கேட்ச்சை விட்டு அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸை ஆடிவிட்டார் என்றால், சஹா விட்ட கேட்ச் பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த கேட்ச்சை சஹா கோட்டைவிட்டதுமே, பவுலர் ஜடேஜா செம கடுப்பாகிவிட்டார். ஆனால் கடுப்பாகி என்ன செய்யமுடியும்? 

உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர், சிறந்த விக்கெட் கீப்பர் என்று சஹாவை புகழ்ந்து புகழ்ந்தே ஓய்த்து கட்டிவிட்டனர். ஒருவரை அதிகமாக புகழ்வதே, அவரை ஓய்த்துக்கட்டுவதற்கான ஒரு உத்தியும் கூட. ஆனால் சஹாவை அந்த உள்நோக்கத்துடன் யாரும் புகழவில்லை என்றாலும், அதுபோன்ற புகழ்ச்சிகள் ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். எல்லாரும் சேர்ந்து புகழ்ந்து தள்ளிய நிலையில், முக்கியமான கேட்ச்சை கோட்டைவிட்டார் சஹா. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்துள்ளது. எல்கர் 76 ரன்களுடனும் டுப்ளெசிஸ் 48 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

click me!