T20 World Cup அரையிறுதிக்கு முன்னேற இந்தியா என்ன செய்ய வேண்டும்? ஆஃப்கான் கையில் சிக்கிய இந்திய அணியின் குடுமி

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 6:06 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வாய்ப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்குமே இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. எனவே இரு அணிகளுமே கடைசி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளன.

க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 4 போட்டிகளில் ஆடியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, 4 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. அதே 4 புள்ளிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அணி குறைவான நெட் ரன்ரேட்டின் காரணமாக புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி அதன் 4வது போட்டியில் இன்று நமீபியாவுக்கு எதிராக ஆடிவருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறும்.

நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அவற்றின் கடைசி போட்டியில் பரஸ்பரம் மோதிக்கொள்கின்றன. அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால்  8 புள்ளிகளுடன் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால் ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், நியூசிலாந்து(நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில்) மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றிருக்கும்.

மறுபுறம் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கும் இந்திய அணி வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை கண்டிப்பாக வீழ்த்திவிடும் என்பதால் இந்திய அணியும் 6 புள்ளிகளை பெறும். ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தும்பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றிருக்கும். 

அப்போதுதான் நெட் ரன்ரேட்டுக்கு முக்கியமான ரோல் இருக்கும். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றியையடுத்து, -1.069 என்பதிலிருந்து +0.073 என்ற ரன்ரேட்டிற்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய 2 அணிகளையும் 50-60 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் வீழ்த்தினால், நல்ல ரன்ரேட்டை பெற முடியும். அதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறமுடியும்.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற, ஸ்காட்லாந்து மற்றும் நமீபியாவுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற வேண்டியது அவசியம். ஆனால் அதுமட்டுமே இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து செல்லாது.  இந்திய அணியின் குடுமி, ஆஃப்கானிஸ்தானிடம் உள்ளது. ஆம்.. ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்த நெட் ரன்ரேட்டெல்லாம் முக்கியம். நியூசிலாந்து ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தும்பட்சத்தில் அந்த அணி 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி வலுவான அணி. இந்தியாவை தவிர மற்ற அனைத்து அணிகளுக்குமே கடும் சவாலளித்துள்ளது ஆஃப்கானிஸ்தான். 

எனவே அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு கடைசியாக ஒரு மறைமுக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி செய்ய வேண்டியதெல்லாம், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற வேண்டியது மட்டுமே.
 

click me!