”தன்னைத்தானே செதுக்கியவன் இவன்”.. சாதனை நாயகன் கிங் கோலியின் பிறந்தநாள் ஸ்பெஷல்..!

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 4:53 PM IST
Highlights

விராட் கோலியின் 33வது பிறந்ததினமான இன்று, கிரிக்கெட்டில் அவரது பயணம் மற்றும் அவரது அபாரமான சாதனைகள் குறித்து பார்ப்போம்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்து, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக ஜொலித்துவரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் 33வது பிறந்தநாள் இன்று. 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் விராட் கோலி, இந்த இடத்தை அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. விராட் கோலியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது கிரிக்கெட் பயணம் மற்றும் சாதனைகளை பார்ப்போம்.

டெல்லியில் 1988 நவம்பர் 5ல் பிறந்த கோலி, பஞ்சாபி இந்து குடும்பத்தை சேர்ந்தவர். கோலிக்கு சிறு வயதிலேயே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் எழ, 2002-2003 பாலி உம்ரிகர் டிராபியில் முதல் முறையாக அண்டர் 15 அணியில் டெல்லிக்காக ஆடினார் கோலி. அதன்பின்னர் அண்டர் 17 டெல்லி அணிக்காகவும் ஆடிய விராட் கோலி, 2008 அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். அந்த அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்றும் கொடுத்தார் கோலி. 

அந்த அண்டர்19  உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலுமே அசத்தினார் கோலி. அந்த தொடரில் 235 ரன்களை குவித்து, 3வது அதிகபட்ச ரன் ஸ்கோரராக திகழ்ந்தார் கோலி. அண்டர் 19  உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த விராட் கோலியை, ஐபிஎல் தொடங்கப்பட்ட அதே ஆண்டில் ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடிவரும் விராட் கோலி, ஐபிஎல்லில் ஒரே அணிக்காக மட்டுமே ஆடிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

அண்டர் 19 உலக கோப்பையை வென்ற அதே 2008ம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும் அறிமுகமானார் கோலி. 2008ல் இந்திய அணியில் அறிமுகமான கோலி, அடுத்த ஆண்டான 2009ல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். அப்போது, யாருமே இவர் எதிர்காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையையே தகர்ப்பார் என்று நம்பப்படுமளவிற்கு வளர்வார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கோலியின் முதல் சதமே அபாரமான சதம். கொல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான அந்த ஒருநாள் போட்டியில் 316 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, சச்சின் டெண்டுல்கர் (8), சேவாக்கின் (10) விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்துவிட, இளம் வீரரான கோலி, கௌதம் கம்பீருடன் ஜோடி சேர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடினார். கம்பீர் சதமடிக்க, அவரைத்தொடர்ந்து கோலியும் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 107 ரன்களை குவித்த விராட் கோலி, 3வது விக்கெட்டுக்கு கம்பீருடன் சேர்ந்து 224 ரன்களை குவிக்க காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியில் இந்திய அணியும் அபார வெற்றி பெற்றது.

முதல் சதத்தையே சேஸிங்கில் தொடங்கிய விராட் கோலி, 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடின இலக்கை விரட்டியபோது 183 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்காக நெருக்கடியான சூழல்களை எல்லாம் சமாளித்து அபாரமாக ஆடி, பல கடினமான/சவாலான இலக்குகளை எல்லாம் விரட்டி சேஸிங் மாஸ்டராக உருவெடுத்தார் கோலி.

தனது முதல் டெஸ்ட் சதத்தை 2012ல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அடித்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 40 சதங்கள் என மொத்தமாக 70 சர்வதேச சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர்கல் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (100)  மற்றும் ரிக்கி பாண்டிங் (71) ஆகிய இருவருக்கு அடுத்து 3ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.

கடைசியாக 2019ல் சதமடித்த கோலி, அதன்பின்னர் 2 ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதனால் இன்னும் ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை முறியடிக்கவில்லை. விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் 23,159 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆட ஆரம்பித்தபோது, கோலியின் ஃபிட்னெஸ் மிகவும் சாதாரணமாக இருந்தது. ஆனால் 2012-2013ம் ஆண்டுக்கு பிறகு ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்திய விராட் கோலி, உடல் எடையையும் கொழுப்பையும் குறைத்து, நல்ல ஃபிட்னெஸை பெற்றார். அதன்பின்னர் ஃபிட்னெஸில் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாது மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

ஃபிட்னெஸில் கவனம் செலுத்தியதை போலவே, தனது பேட்டிங் திறமையை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்தினார். கோலி, ரோஹித் சர்மாவை போல இயல்பாகவே பெரிய/அசாத்திய ஷாட்டுகளை ஆடவல்ல திறமையானவர் அல்ல. டெக்னிக்கலாக நல்ல பேட்ஸ்மேன் என்றாலும், ரோஹித் மாதிரி பெரிய ஷாட்டுகளை அசாத்தியமாக ஆடும் வீரர் அல்ல. ஆனாலும் பெரிய ஷாட்டுகளை அடிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டதுடன், தனது தவறுகளிலிருந்து பாடம் கற்று, கொஞ்சம் கொஞ்சமாக கடுமையான பயிற்சியின் மூலம் தன்னைத்தானே வளர்த்துகொண்டார் கோலி.

2014-2017 காலக்கட்டத்தில் தனது உச்சகட்ட ஃபார்மில் திகழ்ந்த விராட் கோலி ஏராளமான சதங்களை குவித்து ரன் மெஷின் என பெயர் பெற்றார். இந்திய அணியில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த கோலி, 2014ம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றார். 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்று, தோனிக்கே கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார்.

2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல், 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்ததால், ஐசிசி டிராபியை வெல்லாத கேப்டன் என்ற விமர்சனத்தை சுமந்தாலும், தன்னம்பிக்கையுடன் இந்திய அணியை வழிநடத்திவந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் கோலி, தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக தற்போது நடந்துவரும் டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்த விராட் கோலி, இந்திய அணி 2-3 ஆண்டுகளுக்கு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை நம்பர் 1 இடத்தில் வைத்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தாலும், ஐசிசி டிராபியை ஜெயிக்காதது அவர் மீதான பெரும் விமர்சனமாக நீடிக்கிறது.

ஐபிஎல்லிலும் அப்படித்தான்.. 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவரும் கோலி, அந்த அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை. இதுவே அவருக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுக்க, அடுத்த சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துவிட்டார். எனவே அடுத்த ஆண்டிலிருந்து விண்டேஜ் விராட் கோலியை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

விராட் கோலி தலைமையில் தான் இந்திய அணியின் ஃபிட்னெஸ் லெவல் பன்மடங்கு உயர்ந்தது. ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்தினார் கோலி. சாதனைகளுக்கு மட்டுமல்லாது சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரரான விராட் கோலியின் பிறந்ததினமான இன்று, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.
 

click me!