கன்ட்ரோலில் இருந்த ஆட்டத்தை கடைசி 4 ஓவரில் கோட்டைவிட்ட நமீபியா..! ஃபிலிப்ஸ் - நீஷம் காட்டடி பேட்டிங்

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 5:24 PM IST
Highlights

க்ளென் ஃபிலிப்ஸ் மற்றும் ஜிம்மி நீஷமின் கடைசி நேர காட்டடியால் 20 ஓவரில் 163 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 164 ரன்கள் என்ற கடினமான இலக்கை நமீபியாவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.

க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் இன்று நடக்கும் 2 போட்டிகளும் மிக முக்கியமானவை. இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி ஷார்ஜாவில் நடந்துவரும் போட்டியில் நியூசிலாந்தும் நமீபியாவும் ஆடிவருகின்றன. நியூசிலாந்து அணிக்கு இது கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டி. 

வெற்றி கட்டாயத்துடன் அனுபவமற்ற நமீபியா அணியை எதிர்கொண்டு ஆடிவருகிறது நியூசிலாந்து அணி. ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

நமீபியா அணி:

ஸ்டீஃபன் பார்ட், க்ரைக் வில்லியம்ஸ், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வீஸ், ஜேஜே ஸ்மிட், ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் வான் லிங்கென், கார்ல் பிர்கென்ஸ்டாக், ஜேன் நிகால் லாஃப்டி - ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கால்ட்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணிக்கு நமீபியா பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். அதிரடி பேட்ஸ்மேன்கள் மார்டின் கப்டில், டேரைல் மிட்செல் ஆகிய வீரர்களுக்கு அவ்வளவு எளிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் கஷ்டப்பட்டே ரன் அடிக்க வேண்டியதாக இருந்தது. கடந்த போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக அதிரடியாக ஆடி பட்டைய கிளப்பிய கப்டில் இந்த போட்டியில் 18 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேரைல் மிட்செலும் 15 பந்தில் 19 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், வழக்கம்போலவே தனது அந்த பணியை டெவான் கான்வேவுடன் இணைந்து செவ்வனே செய்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர்கள் இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 38 ரன்களை சேர்த்தனர். டெவான் கான்வே 17 ரன்னுக்கு ரன் அவுட்டாகி வெளியேற,  கேப்டன் வில்லியம்சனும் 25 பந்தில் 28 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

16 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 16 ஓவர்கள் வரை ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நமீபியா அணி, கடைசி 4 ஓவரில் கோட்டைவிட்டது. கடைசி 4 ஓவர்களில் க்ளென் ஃபிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் இணைந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

க்ளென் ஃபிலிப்ஸ் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும், நீஷம் 23 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களையும் விளாச, கடைசி 4 ஓவரில் நியூசிலாந்து அணி 67 ரன்களை குவித்தன் விளைவாக, 20 ஓவரில் 163 ரன்களை குவித்து, 164 ரன்கள் என்ற ஷார்ஜா கண்டிஷனில் கடினமான இலக்கை நமீபியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!