டெல்லி கேபிடல்ஸ் அணி விசாகப்பட்டினம் மைதானத்தில் ஏன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது போட்டியில் விளையாடுகிறது என்பதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் ஹோம் மைதானத்தில் 7 போட்டியிலும், அவே மைதானத்தில் 7 போட்டியிலும் என்று மொத்தமாக 14 லீக் போட்டிகளில் விளையாடும். இந்த சீசனில் இதுவரையில் நடந்த 12 போட்டிகளில் அந்தந்த ஹோம் மைதான அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆதலால், ஒவ்வொரு அணிக்கும் அதனுடைய ஹோம் மைதானம் மிகவும் முக்கியம் என்று சொல்லப்படுகிறது.
ஹோம் மைதானத்தில் அதிக வெற்றிகளை பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். தோல்வி அடையும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலை நேரிடும். இது ஒரு புறம் இருந்தாலும் டெல்லி கேபிடல்ஸ் இதுவரையில் விளையாடிய 2 அவே போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தான் இன்று நடக்கும் போட்டியானது டெல்லியின் ஹோம் மைதானமான பெரோஷா கோட்லா மைதானத்தில் (அருண் ஜெட்லி ஸ்டேடியம்) நடைபெற இருந்தது.
ஆனால், அங்கு ஏற்கனவே மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் 11 போட்டிகள் நடைபெற்றது. இதன் காரணமாக மைதானம் சேதமடைந்துள்ளது. எப்படியும் மைதானத்தை பராமரிக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் நிலையில், டெல்லி அணி விளையாடும் போட்டியானது வேறொரு மைதானத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து விசாகப்படினம் மைதானம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மைதானத்தில் 5 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் விளையாட இருக்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானம் தயாரான பிறகு கடைசி 5 போட்டிகள் அந்த மைதானத்தில் டெல்லி விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.