சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர், ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 62ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்து முஷ்தாபிஜூர் ரஹ்மான் பந்தில் பதிரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் 110 முறை எடுத்து கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்தார்.
இவரைத் தொடர்ந்து பிரித்வி ஷா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 43 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தோனி டி20 கிரிக்கெட்டில் 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 18 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் பதிரனாவின் யார்க்கர் பந்தில் கிளீன் போல்டானார்கள்.
நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். 31பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 16ஆவது அரைசதம் அடித்தார். மேலும், அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ரன்கள் எடுத்த நிலையில் பதிரனா பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. பவுலிங் தரப்பில் சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முஷ்தாபிஜூர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.