டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷாவின் கேட்ச் பிடித்ததன் மூலமாக ஒரு விக்கெட் கீப்பராக தோனி 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், இருவரும் நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். முதல் பவர்பிளே ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்டிருந்தது. இதையடுத்து அதிரடி காட்டிய வார்னர் 32 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 62ஆவது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 9 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஷ்தாபிஜூர் ரஹ்மானின் 9.3 ஆவது ஓவரின் போது டேவிட் வார்னர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தார்.
அப்போது லெக் ஸ்லிப் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த மதீஷா பதிரனா ஒரு கையால் பறந்து சென்று கேட்ச் பிடித்தார். இதற்கு தோனி கை தட்டி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியாக வார்னர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் 110 முறை எடுத்து கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்தார்.
MS DHONI BECOMES THE FIRST WK TO COMPLETE 300 DISMISSAL IN T20 HISTORY.
- The GOAT. 🐐 pic.twitter.com/8ZGvEpvQLn
இவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜாவின் 10.4ஆவது ஓவரின் போது பிரித்வி ஷா கொடுத்த எளிய கேட்சை தோனி பிடித்து புதிய சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பராக 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தோனியைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் (274), இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (274), தென் ஆப்பிரிக்காவின் குயீண்ட டி காக் (270), இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (209) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
Terrific catch by Dhoni. 🔥
- Jadeja ends a very good start of Prithvi Shaw. pic.twitter.com/NL8aff5u5S