Rishabh Pant: 465 நாட்களுக்கு பிறகு முதல் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் – கொண்டாடும் டெல்லி கேபிடல்ஸ் டீம்!

By Rsiva kumar  |  First Published Mar 31, 2024, 10:44 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் 465 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் 16ஆவது அரைசதம் அடித்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தார். பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக ஆரம்பித்து அதன் பிறகு அதிரடியாக விளையாடினர். வார்னர், 35 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து பிரித்வி ஷா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 43 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 18 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் பதிரனாவின் யார்க்கர் பந்தில் கிளீன் போல்டானார்கள். நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு 9 பந்துகளில் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் குவித்தார்.

Tap to resize

Latest Videos

கடைசியில் 31 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 16ஆவது அரைசதம் அடித்தார். இதன் மூலமாக 465 நாட்களுக்கு பிறகு முதல் அரைசதம் அடித்துள்ளார்.மேலும், அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ரன்கள் எடுத்த நிலையில் பதிரனா பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்னதாக விளையாடிய முதல் 2 போட்டிகளில் முறையே 18 ரன்கள், 28 ரன்கள் என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது 3ஆவது போட்டியில் இக்கட்டான நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது.

click me!