
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்துவருகிறது. இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
முதல் போட்டியில் ஆடிராத கேஎல் ராகுல், இந்த போட்டியில் ஆடுவதால் இஷான் கிஷன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையில் ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார்.
கடந்த போட்டிகளில் 4ம் வரிசையில் ஆடிய ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஓபனிங்கில் இறக்கிவிடப்பட்டார். ஏற்கனவே கேஎல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் ஆடிய நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரே தொடக்க வீரராக ஆடினார். எனவே அவரே தொடர்ந்து ஓபனிங்கில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவும் அணி நிர்வாகமும் சற்று வித்தியாசமாக சிந்தித்துள்ளனர்.
ரிஷப் பண்ட் அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வீரர் என்பதால், பவர்ப்ளே ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டுள்ளார். கேஎல்ராகுல் எந்த வரிசையிலும் ஆடக்கூடிய வீரர் என்பதால், அவர் மிடில் ஆர்டரில் ஆடவுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி முடிவை கண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறங்குவார் என்று சற்றும் எதிர்பார்த்திராத அந்த அணியினருக்கு, இந்திய அணியின் முடிவு செம சர்ப்ரைஸாக இருந்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழக்க, ரிஷப்பும் கோலியும் இணைந்து ஆடிவருகின்றனர்.