கொரோனா ஊரடங்கு: 3 மாசமா சம்பளம் கொடுக்காத கொடுமை.. கடும் சோகத்தில் கிரிக்கெட் வீரர்கள்

By karthikeyan VFirst Published Apr 23, 2020, 4:44 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு ஜனவரி மாதத்திலிருந்து ஊதியமே வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 
 

கொரோனா ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வருவாயை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவியை இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்துவருகின்றன.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் நிறைய சம்பாதித்து கோடீஸ்வரர்களாக இருப்பது போன்று தெரியும். இந்தியாவில் அது உண்மை தான் என்றாலும், அனைத்து நாடுகளிலும் நிலைமை அப்படியில்லை. சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தான் மிகவும் செல்வ செழிப்புடன் இருக்கும் வாரியம். 

ஆனால் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய வாரியங்கள் எல்லாம் போதிய நிதி இல்லாததால் வீரர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கிவருகின்றன. இந்தியாவை போல அங்கு நிலைமை இல்லை. அவர்களுக்கெல்லாம் ஊதியம் குறைவுதான். அதனால்தான் அவர்கள் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பாகவுள்ள ஐபிஎல்லில் ஆட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அவர்கள் ஆடிய அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் ஆடியதற்கான ஊதியம், இலங்கைக்கு எதிராக ஆடிய தொடருக்கான ஊதியம் என எந்த ஊதியமுமே வழங்கப்படவில்லை. மகளிர் அணி வீராங்கனைகளுக்கும் உள்நாட்டு வீரர்களுக்கும் கூட ஊதியம் வழங்கப்படவில்லையென்றே தெரிகிறது. 

கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியமே வழங்கப்பட முடியாத அளவிற்கு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் வெய்ன் லூயிஸ், இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களை நடத்தியதில் மட்டும் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு நஷ்டம் ஏற்பட்டது. 2 தொடர்களுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்கு சேர்த்தே ஒரு மில்லியன் டாலருக்கும் குறைவாகவே வருமானம் வந்தது என தெரிவித்துள்ளார்.

 எனவெ வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கடந்த 3 மாதங்களில் ஆடிய எந்த போட்டிக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. 
 

click me!