இந்தியாவையே முடக்கிய கொரோனா.. சச்சின் டெண்டுல்கரின் அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Apr 22, 2020, 10:37 PM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்களை காக்க போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு மரியாதையளிக்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் ஒரு முடிவெடுத்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துவிட்டது. 662 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா சமூக தொற்றாக பரவாமல் தடுத்து, கொரோனாவிலிருந்து முழுமையாக மீள ஊரடங்கை மே 3 வரை நீட்டித்துவிட்டு, தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. 

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அனைவரும் வீடுகளில் பயந்து முடங்கியுள்ள சூழலிலும், தன்னலம் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் களப்பணியாற்றிவருகின்றனர். நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க தன்னலம் பாராமல் இரவு பகலாக உழைத்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் எல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள்.

ஆனால் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்களை தாக்குவது, கொரோனாவுக்கு எதிராக போராடியதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. 

எனவே மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு, அவசரம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை போற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறோம். 

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களது உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு மரியாதையை தெரியப்படுத்தும் விதமாக தனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்று சச்சின் டெண்டுல்கர் முடிவெடுத்துள்ளார். வரும் 24ம் தேதி அவர் தனது 47வது பிறந்தநாள். இந்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் அந்த பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
 

click me!