நீ மட்டும்தான் ஆளா? நானும் ஆடத்தாண்டா வந்துருக்கேன்! யுவராஜிடம் கெத்து காட்டி தாதாவின் வாயடைத்த கைஃப்

By karthikeyan VFirst Published Apr 23, 2020, 3:34 PM IST
Highlights

2002 நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து யுவராஜ் சிங்கும் முகமது கைஃபும் யூடியூபில் வெளிப்படையாக பேசி, பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
 

2002ல் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை சமன் செய்ததுடன் நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரை வென்றதை அவ்வளவு எளிதில் எந்த இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்கமுடியாது. ஃப்ளிண்டாஃபிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த போட்டியில் வென்றதும் கேப்டன் கங்குலி, லார்ட்ஸ் பெவிலியனில் நின்றுகொண்டு டிஷர்ட்டை கழட்டி சுற்றிய சம்பவம் வரலாற்று சம்பவமாக நிலைத்துவிட்டது. அந்த தொடர் தான், ஒரு கேப்டனாக கங்குலிக்கும், அப்போது துவண்டு போயிருந்த இந்திய அணிக்கும் உத்வேகமாக அமைந்தது.

லார்ட்ஸில் நடந்த  அந்த இறுதி போட்டியில் 326 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. அதுவும் சச்சின், டிராவிட் ஆகிய சீனியர் வீரர்கள் சரியாக ஆடாததால், 146 ரன்களுக்கே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் யுவராஜும் கைஃபும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். ஆனால் யுவராஜ் சிங்கும் 69 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் நின்ற கைஃப்,75 பந்தில் 87 ரன்களை குவித்து இந்திய அணிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். கடைசி ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

அந்த போட்டியில் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த யுவராஜ் சிங்கும் கைஃபும் யூடியூப் ஒன்றில் அந்த இன்னிங்ஸ் குறித்து சுவாரஸ்யமாக பேசியுள்ளனர். 

அந்த உரையாடல் இதோ..

கைஃப்: அந்த போட்டியின் ஹைலைட்ஸை அடிக்கடி டிவியில் பார்ப்பேன். கங்குலி பெவிலியனில் இருந்து என்னிடம், சிங்கிள் எடுத்துவிட்டு, ஸ்டிரைக்கை உங்களிடம் கொடுக்குமாறு சிக்னல் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

யுவராஜ் சிங்: அதைப்பற்றி அப்புறம் பேசுவோம். நீங்கள் களத்திற்கு வரும்போது என்னிடம் என்ன பேசினீர்கள் என்று நினைவிருக்கிறதா?

கைஃப்: பார்ட்னர்ஷிப் பில்ட் செய்வோம் என்றேன்.

யுவராஜ் சிங்: இல்லை.. க்ளவுஸை முட்டிக்கொண்டு நாம ஆடுவோம்.. என்று நான் சொல்ல, நீங்களும் அதையே சொன்னீர்கள். இருவரும் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக் ரொடேட் செய்து நன்றாக ஆடினோம். நான் இடையிடையே பவுண்டரிகள் அடித்ததால், தாதா(கங்குலி) பெவிலியனிலிருந்து, ஸ்டிரைக்கை என்னிடம் கொடுக்குமாறு உங்களிடம் கூறினார். அதற்கடுத்த பந்து என்ன நடந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

கைஃப்: அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் பந்து.. நான் பொதுவாகவே ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் ஆடத்தான் விரும்புவேன். அதேபோலவே அந்த பந்தையும் புல் ஷாட் ஆடினேன். பந்து நன்றாக சிக்கியதால் சிக்ஸருக்கு சென்றது.

யுவராஜ் சிங்: அந்த சிக்ஸருக்கு பிறகு என்னிடம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

கைஃப்: சிங்கிள் ஆடலாம்.. மோசமான பந்துகளை அடித்து ஆடலாம் என்றேன்.

யுவராஜ் சிங்: இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை.. ஏய் நானும் ஆடத்தான் வந்துருக்கேன் என்றீர்கள். நீங்கள் அடித்ததை பார்த்துவிட்டு உங்களாலும் பெரிய ஷாட் ஆட முடியும் என்பதை உணர்ந்ததால் அதன்பின்னர் தாதா அமைதியாகிவிட்டார். உங்களை எதுவும் சொல்லவில்லை.

கைஃப்: அந்த ஷாட்டின் மூலம் நான் உங்களுக்கு உறுதுணையாக ஆடமுடியும் என தாதா நம்பினார். அந்த ஷாட்டுக்கு முன், ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் களத்திற்கு வந்து எனக்கு மெசேஜ் சொல்வதற்கு ரெடியாக இருந்தார். ஆனால் நான் சிக்ஸர் அடித்ததும், அனைவரையும் அமைதியாக உட்காரும்படி சொல்லிவிட்டார் தாதா. 

யுவராஜ் சிங்: உண்மையாகவே அந்த போட்டி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. சச்சின் அவுட்டானதுமே இங்கிலாந்து, அவர்கள் ஜெயித்துவிட்டதாகவே நினைத்தனர். நாம் நன்றாக ஆடுவோம் என அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் நாம் நன்றாக ஆடியதை பார்த்ததும் போட்டி கையைவிட்டு போனதை உணர்ந்து, நெருக்கடி கொடுக்க முடிவெடுத்தனர். ஆனால் அதற்குள்ளாக நாம் செட்டில் ஆகிவிட்டதால் அவர்களுக்கு கடினமானது. எனவே போட்டியின் எந்த தருணத்திலும் நாம் ஜெயித்துவிடுவோம் என்று ரிலாக்ஸ் ஆகக்கூடாது. இதேபோல நாமும் தோற்றிருக்கிறோம். எனவே எந்த சூழலிலும் ரிலாக்ஸ் ஆகக்கூடாது என்பதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம்.

இப்படியாக கலகலப்பாக உரையாடி உண்மைகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் இருவரும் பகிர்ந்துகொண்டனர். 
 

click me!