50 ஓவர் ஸ்பின் பவுலிங்.. வங்கதேசத்தை வச்சு செஞ்ச வெஸ்ட் இண்டீஸ்!

Published : Oct 21, 2025, 10:12 PM IST
BAN vs WI Spin record

சுருக்கம்

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ், சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி புதிய உலக சாதனையைப் படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், 50 ஓவர்கள் முழுவதையும் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்டு வீசிய முதல் அணி என்ற பெருமையை ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது.

சுழல் பந்துவீச்சாளர்கள் அபாரம்

வெஸ்ட் இண்டீஸின் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களான அகீல் ஹொசைன், ரோஸ்டன் சேஸ், காரி பியர், குடாகேஷ் மோட்டி மற்றும் அலிக் அதானஸ் ஆகியோர் தலா 10 ஓவர்களை வீசினர். இந்த ஐவரும் சேர்ந்து பங்களாதேஷின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியை 50 ஓவர்களில் 213 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

இந்தச் சுழல் பந்துவீச்சு கூட்டணியில், அலிக் அதானஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குடாகேஷ் மோட்டி 10 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் இந்த 50 ஓவர்களையும் வெறும் 3 மணி நேரம் 18 நிமிடங்களில் நிறைவு செய்தனர்.

 

 

முறியடிக்கப்பட்ட இலங்கையின் சாதனை

இதற்கு முன்னர், ஒருநாள் போட்டியில் அதிக ஓவர்கள் சுழற்பந்து வீசப்பட்ட சாதனையை இலங்கை அணி வைத்திருந்தது. அந்த அணி 1996-ஆம் ஆண்டு டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 44 ஓவர்கள் (264 பந்துகள்) சுழற்பந்து வீசியிருந்தது. அந்தப் போட்டியில் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான்கள் முத்தையா முரளிதரன், குமார் தர்மசேன தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணி ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 41.2 ஓவர்கள் (248 பந்துகள்) சுழற்பந்து வீசியுள்ளது. இது 2011-ஆம் ஆண்டு இந்தூரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்தது.

பங்களாதேஷ் பேட்டிங் சறுக்கல்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆனால் அந்த அணியின் எதிர்பார்ப்புக்கு மாறாக பிட்ச் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தது. தட்டுத்தடுமாறி ஆடிய பங்களாதேஷ் வீரர்களில் ஒருவர்கூட 50 ரன்களைக் கூட எட்டவில்லை.

அதிகபட்சமாக சௌமியா சர்க்கார் 89 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், 11-வது வீரராகக் களமிறங்கிய ரிஷாத் ஹொசைன் 14 பந்துகளில் அதிரடியாக 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

பின்னர் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் சரியாக 213 ரன்கள் எடுத்ததால், சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து 10 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி 9 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வித்தியாசமான பந்துவீச்சு உத்தியைக் கையாண்டு பங்களாதேஷ் அணியின் ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், பேட்டிங்கில் அரைசதம் அடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?