பேட்டிங்கில் மிரட்டிய பொல்லார்டு; பவுலிங்கில் பட்டைய கிளப்பிய பிராவோ! 2வது டி20யில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 2, 2021, 3:09 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதையடுத்து, 2-2 என டி20 தொடர் சமனில் உள்ளது.
 

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 2 வெற்றிகளையும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியையும் பெற்றிருந்த நிலையில், 4வது டி20 போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 167 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லெவிஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து கெய்ல்(5), ஹெட்மயர்(7) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான லெண்டல் சிம்மன்ஸ் அபாரமாக ஆடி 34 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கலுடன் 47 ரன்கள் அடித்தார்.

நிகோலஸ் பூரன்(16), ஆண்ட்ரே ரசல்(9) ஆகியோரும் ஏமாற்றமளிக்க, கேப்டன் பொல்லார்டு பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அணியை கரைசேர்த்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பொல்லார்டு 25 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களை விளாசினார்.  பின்வரிசையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஃபேபியன் ஆலன் 13 பந்தில் தன் பங்கிற்கு 19 ரன்களை சேர்த்து கொடுக்க, 20 ஓவரில் 167 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ்.

168 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர அந்த அணியில் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தென்னாப்பிரிக்க வீரர்கள் யாரையும் அவ்வளவு எளிதாக வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ஸ்கோர் செய்ய அனுமதிக்கவில்லை. குறிப்பாக அனுபவ ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து டி காக் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 146 ரன்கள் மட்டுமே அடிக்க, 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதையடுத்து டி20 தொடர் 2-2 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 ஜூலை 3ம் தேதி(நாளை) நடக்கிறது.
 

click me!