ரஹானே இருக்கும்போது ராகுலிடம் ஏன் கேப்டன்சியை கொடுத்தீங்க..? இந்திய அணியை விளாசிய முன்னாள் டெஸ்ட் ஓபனர்

By karthikeyan VFirst Published Jan 8, 2022, 8:20 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விராட் கோலி காயத்தால் ஆடாத நிலையில், ஏற்கனவே டெஸ்ட் அணியை வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ரஹானே இருக்கும்போது அவரை கேப்டனாக நியமிக்காமல், கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் வாசிம் ஜாஃபர்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது. வரும் 11ம் தேதி கேப்டவுனில் தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.

ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக ஆடவில்லை. விராட் கோலி ஆடாததால் கேஎல் ராகுல் அந்த போட்டியில் கேப்டன்சி செய்தார். டெஸ்ட் அணியை முதல் முறையாக வழிநடத்திய கேஎல் ராகுலின் அனுபவமின்மை கேப்டன்சியில் வெளிப்பட்டது. விராட் கோலியின் எனர்ஜி, ஆக்ரோஷம், அதிரடியான அணுகுமுறை ஆகியவற்றை இந்திய அணி கண்டிப்பாக மிஸ் செய்தது.

அந்த போட்டியில் சீனியர் வீரரும், ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவருமான ரஹானே இருந்தபோதிலும், அவரை கேப்டனாக நியமிக்காமல் கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்த இந்திய அணியின் முடிவு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர்.

இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ரஹானே, கோலி ஆடாத போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி பல வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தோல்வியை கூட அடைந்திராத கேப்டன் ரஹானே. 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கோலி உள்ளிட்ட பல முக்கியமான முன்னணி வீரர்கள் இல்லாமலேயே டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தவர் ரஹானே. கோலி ஆடாத அனைத்து போட்டிகளிலும் மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்திருக்கிறார் ரஹானே. அவரது அண்மைக்கால மோசமான ஃபார்மின் விளைவாக, அவரது இடம் இந்திய அணியில் சந்தேகமானது. அதனால், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டு துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

ஆனால் ரோஹித் காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை. கோலியும் 2வது டெஸ்ட்டில் ஆடாததால், இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ராகுலிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது அனுபவமின்மை அப்பட்டமாக வெளிப்பட்டது.

இந்நிலையில், ரஹானே இருக்கும்போது ராகுலை கேப்டனாக நியமித்த இந்திய அணியின் முடிவை விமர்சித்துள்ளார் வாசிம் ஜாஃபர். இதுகுறித்து கருத்து தெரிவித்த வாசிம் ஜாஃபர், இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு எனக்கு வியப்பாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடைந்திராத ஒரு கேப்டனான அஜிங்க்யா ரஹானேவை அணியில் வைத்துக்கொண்டு, கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது ஏன்? ரஹானே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தவர். ராகுல் மீது எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படுகிறார் ராகுல். பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் கோலி இல்லாதபோது, ரஹானே தான் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பது என் கருத்து என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
 

click me!