கோலியை விட ஸ்மித் தான் சிறந்த பேட்ஸ்மேன்..! முன்னாள் இந்திய வீரரின் தில்லான தேர்வு

By karthikeyan VFirst Published Jun 6, 2020, 7:44 PM IST
Highlights

விராட் கோலியை விட ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். இந்த போட்டியில், ஸ்மித்தை விட எப்போதுமே கோலி தான் முன்னிலை பெறுகிறார்.

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபரிடம், கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வாசிம் ஜாஃபர், ஓராண்டு தடை முடிந்து வந்த பின்னர், ஸ்மித்தின் ஃபார்மும் அவர் ஆடும் விதமும் வேற லெவலில் இருக்கிறது. கண்டிப்பாக ஸ்மித் தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். 

ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84 ஆகும். விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்களுடன் 7240 ரன்கள் அடித்துள்ளார். ஸ்மித்தை விட 13 டெஸ்ட் போட்டிகள் அதிகமாக ஆடியுள்ள கோலி, அவரைவிட வெறும் 13 ரன்கள் மட்டுமே கூடுதலாக அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 53.63 தான். அவரைவிட சுமார் 9 ரன்கள் அதிக சராசரியை வைத்துள்ளார் ஸ்மித்.

கோலி 2018ல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் சரியாக ஆடவில்லை. அதுமாதிரி சில சமயங்களில், ஒட்டுமொத்த தொடரிலும் கோலி சொதப்பியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுதும் எந்த நாட்டில் ஆடினாலும், ஸ்மித் அருமையாக பேட்டிங் ஆடி அசத்துகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், வெறும் 7 இன்னிங்ஸ்களில் 110 என்ற சராசரியுடன் மொத்தம் 774 ரன்களை குவித்தார் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. 

click me!