IND vs SA: அவரை முதல் டி20 போட்டியிலேயே ஆட வச்சுருக்கணும்! 2வது போட்டியில் சான்ஸ் கிடைக்காது - வாசிம் ஜாஃபர்

By karthikeyan VFirst Published Jun 12, 2022, 3:17 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். 2வது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் அடையாளம் காணப்பட்ட அரிதினும் அரிதான திறமை உம்ரான் மாலிக். காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், இர்ஃபான் பதானால் அடையாளம் காணப்பட்டு வளர்த்துவிடப்பட்ட வீரர். 

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய உம்ரான் மாலிக் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் சீசனின் அதிவேக பந்தாக இருந்தது. ஃபைனலில் லாக்கி ஃபெர்குசன் 157.3 கிமீ வேகத்தில் பந்துவீசி உம்ரானை முந்தினார்.

150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அல்லு தெறிக்கவிட்டார் உம்ரான் மாலிக். அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முந்தைய பயிற்சியில் 163.7 கிமீ வேகத்தில் பந்தை வீசி சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அக்தர் வீசிய ரெக்கார்டு அதிவேக பந்தான 161.3 கிமீ வேகத்தை விட இது அதிகம். ஆனாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடக்கவுள்ள நிலையில், 2வது போட்டிக்கு முந்தைய பயிற்சியில் ரிஷப் பண்ட்டுக்கு உம்ரான் மாலிக் வீசிய அதிவேக பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டின் பேட் உடைந்தது. இவ்வாறு பயிற்சியிலும் அதிவேகத்தில் பந்துவீசி மிரட்டினாலும், உம்ரான் மாலிக்கிற்கு 2வது டி20 போட்டியின் ஆடும் லெவனிலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் ஒரேயொரு போட்டியை வைத்து அணி காம்பினேஷனில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பதால் உம்ரான் மாலிக் 2வது போட்டியிலும் ஆட வாய்ப்பில்லை.

ஆனால் அவரை முதல் டி20 போட்டியிலேயே ஆடவைத்திருக்க வேண்டும் என்பதே முன்னாள் வீரர்கள் பலரது கருத்து. அதைத்தான் வாசிம் ஜாஃபரும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர், 2வது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்வது சரியாக இருக்காது. முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்குவதே சிறந்தது. இது 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு பின்னால் கிடைக்கும். அதனால் உம்ரான் மாலிக் 2வது டி20 போட்டியில் ஆட வாய்ப்பில்லை. அணி காம்பினேஷனில் நிறைய மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!