டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரெண்ட் செட் பண்ணது எங்க ஆளுங்க.. சேவாக்லாம் இல்ல.. வாண்டடா வம்பிழுக்கும் வாசிம் அக்ரம்

By karthikeyan VFirst Published Mar 30, 2020, 9:06 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான தொடக்க பேட்டிங்கை ஆடியதில் முன்னோடி சேவாக் அல்ல; அஃப்ரிடி என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் வழக்கமாக நிதானமாக தொடங்கும் பாரம்பரிய பேட்டிங் ஸ்டைலை மாற்றி, தொடக்கம் முதலே அடித்து ஆடி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டத்தை மாற்ற வல்லவர் சேவாக். அதனால் தான் சேவாக்கால் 2 முறை முச்சதம் அடிக்க முடிந்தது. 

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே நிதானமாகத்தான் ஆட வேண்டும் என்ற மனநிலையிலிருந்து வெளிவந்து அதிரடியாகவும் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தவர் சேவாக் தான் என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தைரியமாக அடித்து ஆடி அதிரடியாக தொடங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் சேவாக் அல்ல என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யூடியூபில் பேசியுள்ள வாசிம் அக்ரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், அஃப்ரிடிக்கு அடுத்துதான் வந்தார். அஃப்ரிடி 1999-2000லயே டெஸ்ட் கிரிக்கெட்டின் மனநிலையை மாற்றிவிட்டார். அஃப்ரிடிக்கு எதிராக பந்துவீசும் பவுலர் நானாக இருந்தால் கூட, அவரை அவுட்டாக்கிவிட முடியும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் அவுட்டாக்குவதற்கு முன்பாக அவர் எனது பவுலிங்கில் கண்டிப்பாக சில பவுண்டரிகளை அடித்துவிடுவார். சற்று ஈசியான பந்து கிடைத்தால் சிக்ஸர்களை விளாசிவிடுவார்.

1998ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அஃப்ரிடியை, 1999ல் இந்திய சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச்செல்ல விரும்பினேன். ஆனால் தேர்வாளர்கள் சிலர் அவரை அழைத்துச்செல்ல வேண்டாம் என்றனர். உடனே நான், இம்ரான் கானிடம் அஃப்ரிடியை அழைத்து செல்ல விரும்புகிறேன் என்று கூறினேன். 

அவரும் உடனே, ஆம் கண்டிப்பாக அஃப்ரிடியை அழைத்துச்செல்லுங்கள். அவர் நமக்காக 1-2 போட்டிகளை கண்டிப்பாக ஜெயித்துக்கொடுப்பார் என்று கூறியதுடன், அஃப்ரிடியை தொடக்க வீரராக இறக்கிவிடுங்கள் என்றும் ஆலோசனை கூறினார். அதேபோலவே அஃப்ரிடியை தொடக்க வீரராக இறக்கினோம். சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் தெறிக்கவிட்டார். கும்ப்ளே மற்றும் சுனில் ஜோஷியின் ஸ்பின் பவுலிங்கை சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததில் சேவாக்கிற்கே முன்னோடி அஃப்ரிடி தான் என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
 

click me!