ஆஸ்திரேலியாவின் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி.. சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் தேர்வு.. லெஜண்ட் வீரரே டீம்ல இல்ல

By karthikeyan VFirst Published Mar 30, 2020, 4:17 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கால் உலகமே வீட்டில் முடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுதும் 7 லட்சத்துக்கும் அதிகமானோரும் இந்தியாவில் 1200 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 40 ஆயிரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

எனவே வீடுகளில் முடங்கி கிடக்கும் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் ஏதாவது ஒரு டாஸ்க்கை செய்துவருகின்றனர். சில கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகின்றனர். சிலர் ஆல்டைம் பெஸ்ட் அணிகளை தேர்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஹைடன் மற்றும் மைக்கேல் ஸ்லேட்டர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஜஸ்டின் லாங்கரை ஷேன் வார்னே கருத்தில்கொள்ளவில்லை.

மூன்றாம் வரிசை வீரராக, ஆஸ்திரேலிய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவரும் சிறந்த பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ள ஷேன் வார்னே, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக மார்க் வாஹ், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆலன் பார்டர் தான் இந்த அணியின் கேப்டன். 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஆடம் கில்கிறிஸ்ட்டையும் ஸ்பின் பவுலராக ஆஃப் ஸ்பின்னர் டிம் மேவையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக க்ளென் மெக்ராத், ஜேசன் கில்லெஸ்பி மற்றும் ப்ரூஸ் ரீட் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் டென்னிஸ் லில்லியை தனது ஆல்டைம் லெவனில் ஷேன் வார்னே தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் ஆச்சரியமும் கூட.

ஷேன் வார்னே தேர்வு செய்த ஆல்டைம் டெஸ்ட் லெவன்:

மேத்யூ ஹைடன், மைக்கேல் ஸ்லேட்டர், ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ், ஆலன் பார்டர்(கேப்டன்), ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), டிம் மே, ஜேசன் கில்லெஸ்பி, க்ளென் மெக்ராத், ப்ரூஸ் ரீட்.
 

click me!