மெண்டல் டார்ச்சர்னா என்னனு முதல்ல தெளிவா சொல்லுப்பா முகமது ஆமீர்..! வக்கார் யூனிஸ் செம காட்டம்

By karthikeyan VFirst Published Oct 3, 2021, 9:03 PM IST
Highlights

மெண்டல் டார்ச்சர் என்றால் என்னவென்று முகமது ஆமீர் விளக்கமளிக்குமாறு பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
 

பாகிஸ்தான் அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான முகமது ஆமீர் கடந்த ஆண்டு இறுதியில் திடீரென ஓய்வு அறிவித்தார். ஓராண்டுக்குள்ளாக டி20 உலக கோப்பை இருந்தபோதிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திடீரென ஓய்வு அறிவித்தார் ஆமீர்.

ஓய்வு பெற்றதற்கு ஆமீர் கூறிய காரணம் தான், பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. பாகிஸ்தானுக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து சிறந்த பங்காற்றியுள்ள மேட்ச் வின்னர்களை, அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்காக கூட மரியாதை கொடுக்காமல், வெறும் புள்ளி விவரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டிய முகமது ஆமீர், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மெண்டல் டார்ச்சர் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

முகமது ஆமீர் குற்றம்சாட்டிய காலக்கட்டத்தில் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் மிஸ்பா உல் ஹக்கும் வக்கார் யூனிஸும் தான். டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரத்தில் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக்கும், பவுலிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து வக்கார் யூனிஸும் ராஜினாமா செய்தனர்.

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியபிறகு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் குறித்து வக்கார் யூனிஸ் விளக்கமளித்துவருகிறார். அந்தவகையில், நேர்காணல் ஒன்றில், ஆமீர் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த வக்கார் யூனிஸ், இந்த கேள்வியை அவரிடம்(ஆமீர்) தான் நீங்கள் கேட்க வேண்டும். தவறுதலாக என்னிடம் கேட்கிறீர்கள். மெண்டல் டார்ச்சர் என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை. முதலில் மெண்டல் டார்ச்சர் என்றால் என்னவென்று அவரை தெளிவுபடுத்த சொல்லுங்கள் என்று வக்கார் யூனிஸ் தெரிவித்தார்.
 

click me!