IPL 2021 பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது ஆர்சிபி..!

By karthikeyan VFirst Published Oct 3, 2021, 7:42 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு 3வது அணியாக தகுதிபெற்றது ஆர்சிபி அணி.
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய நிலையில், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில், பஞ்சாப்பை எதிர்கொண்டது ஆர்சிபி அணி.

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடி 164 ரன்கள் அடித்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 9.4 ஓவரில் 68 ரன்களை சேர்த்தனர். கோலி 25 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ரன்னே அடிக்காமலும் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

ரவி பிஷ்னோய் வீசிய 8வது ஓவரின் 3வது பந்திலேயே அவுட்டாகியிருக்க வேண்டிய, ஆனால் டிவி அம்பயர் செய்த தவறால் தப்பிய தேவ்தத் படிக்கல் 40 ரன்களுக்கு டேனியல் கிறிஸ்டியனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த மேக்ஸ்வெல், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 29 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக தொடர்ச்சியாக 3வது அரைசதத்தை விளாசினார் மேக்ஸ்வெல். ஆனால் மற்றொரு பவர் ஹிட்டரான டிவில்லியர்ஸ் அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி அதிரடியை ஆரம்பத்த மாத்திரத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஷமி வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து வழக்கம்போலவே அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 10.4 ஓவரில் 91 ரன்களை குவித்தனர். கேஎல் ராகுல் 39 ரன்னில் ஆட்டமிழக்க, ஃபார்மில் இல்லாத பூரன் 3 ரன்னில் நடையை கட்டினார்.

அபாரமாக ஆடி பஞ்சாப் அணியின் நம்பிக்கையாக திகழ்ந்த மயன்க் அகர்வால் 57 ரன்னில் அவுட்டாக, அதற்கடுத்த பந்திலேயே சர்ஃபராஸ் கான் கோல்டன் டக்காகி வெளியேறினார். அதன்பின்னர் மார்க்ரம் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க்ரமும் ஆட்டமிழந்ததால் ஷாருக்கான் மீதான அழுத்தம் அதிகரிக்க, அவரும் 16 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்த பஞ்சாப் அணி, 6 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, 3வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
 

click me!