IPL 2021 ரெய்னாவை தூக்கிட்டு இவரை சேர்க்கலாமே..? லெஜண்ட் ஷான் பொல்லாக்கின் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Oct 3, 2021, 8:55 PM IST
Highlights

ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பாவை சேர்க்கலாம் என்று ஷான் பொல்லாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் 3 முறை கோப்பையை வென்று சாம்பியன் அணியாக திகழும் சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த சீசனில் மீண்டும் பழைய சிஎஸ்கேவை போல் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து, முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.

சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய வீரர்கள் முக்கியமான காரணம். ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணிக்காக ஆடும் இந்த வீரர்கள், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளாக திகழ்கின்றனர்.

கடந்த சீசனில் ரெய்னா ஆடாததால் தான், சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேற முடியாமல் போய்விட்டது என்று ரசிகர்கள் பலர் வேதனைப்பட்டனர். ஆனால் இந்த சீசனில் ரெய்னா ஆடியும் பிரயோஜனம் இல்லை எனுமளவிற்குத்தான் அவரது ஆட்டம் உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த சீசனில் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லாமல், ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். சிஎஸ்கே அணியின் பெரிய பலமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் உள்ளனர். மொயின் அலி, ராயுடு, ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பு செய்துவருகின்றனர். ஆனால் மிடில் ஆர்டரில் ரெய்னா மட்டும் திணறிவருகிறார். இந்த சீசனில் 12 போட்டிகளில் 11ல் பேட்டிங் ஆடி வெறும் 160 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இந்நிலையில், ரெய்னாவிற்கு மாற்று வீரர் ஆப்சன் குறித்து பேசிய ஷான் பொல்லாக், உத்தப்பாவிற்கு வாய்ப்பு கொடுத்தால் வியப்புதான். சிஎஸ்கே அணி மாற்றங்களை விரும்பாத அணி. ஆனால் சிஎஸ்கே அணி வெற்றிப்பயணத்தை தொடர வேண்டுமென்றால், அந்த அணியின் அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆடவேண்டும்.

ரெய்னா மீண்டும் சிறப்பான பேட்டிங் டச்சிற்கு வரமுடியாமல் திணறுகிறார். ரெய்னா பந்தை மைதானத்திற்கு வெளியே அசால்ட்டாக அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, நல்ல பவுலரும் கூட. ஃபீல்டிங்கிலும் மிரட்டிவிடுவார். ஆனால் அவர் இந்த சீசனில் இதுவரை ரெய்னாவின் சிறந்த ஆட்டத்தை பார்க்கமுடியவில்லை என்று ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார்.
 

click me!