ஷிகர் தவான் கேப்டன்சியை விட அதில் தான் அதிக கவனம் செலுத்துவார் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Jul 5, 2021, 5:53 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான தொடர் ஷிகர் தவானுக்கு மிக முக்கியமானது என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

இந்திய வெள்ளைப்பந்து அணியின் பிரதான தொடக்க வீரராக இருந்துவந்த ஷிகர் தவான் பின்னர் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் தனக்கான இடத்தை அவர் பிடித்தாலும், டி20 கிரிக்கெட்டில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.

ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுலே தொடக்க வீரராக இறங்கிவருகிறார். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 போட்டிகளில் தானே தொடக்க வீரராக இறங்கவிருப்பதாக கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். ஆனால் கேஎல் ராகுல் தொடக்க வீரராக இறங்கவே அதிக வாய்ப்புள்ளது.

இப்படியாக டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க கடும் போட்டி நிலவுகிறது. இந்த கடும் போட்டிக்கு இடையே தன்னையும் அந்த போட்டியில் ஒருவராக நிலைநிறுத்திக்கொள்ள, இலங்கைக்கு எதிரான தொடர் தவானுக்கு மிக முக்கியமானது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை ஷிகர் தவான் தான் வழிநடத்தவுள்ளார். கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளதால், இலங்கையை தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி எதிர்கொள்ளவுள்ளது.

எனவே இது தவானுக்கு மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்க சரியான வாய்ப்பு.  தவானின் ஸ்டிரைக் ரேட் தான் அவரது பிரச்னையாக இருந்துவந்தது. தவான் ஓரளவிற்கு ஸ்கோர் செய்தாலும், அவரது ஸ்டிரைக் ரேட் மிகக்குறைவாக இருந்ததால் தான் அணியில் இடத்தை இழந்தார். ஆனால் ஐபிஎல்லில் அதிரடியாக ஆடி நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். 

எனவே அந்த ஃபார்மை இலங்கை தொடரிலும் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிப்பதே தவானின் இலக்காக இருக்கும். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், தவான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரும் கூட.

தன் நாட்டின் தேசிய அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பெருமை. ஆனால் இப்போதைக்கு ஷிகர் தவான் கேப்டன்சியை விட, பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதிலேயே கவனம் செலுத்துவார். டி20 உலக கோப்பையை மனதில் வைத்து அவர் பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்துவார் என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

click me!