IND vs NZ டிராவிட் - கோலி கண்டிப்பா அந்த சீனியர் வீரரை ஒதுக்கமாட்டாங்க..! ஷ்ரேயாஸ் ஐயர் தான் பாவம் - லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Nov 28, 2021, 9:43 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விராட் கோலி இந்திய அணியில் இணைவதால், ஒரு வீரரை நீக்க வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தான் நீக்கப்படுவார் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கடந்த 25ம் தேதி கான்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடாததால் மிடில் ஆர்டரில் ஆடும் வாய்ப்பை பெற்றார் ஷ்ரேயாஸ் ஐயர்.

டெஸ்ட் அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த (105) ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் (65) அடித்தார். 

அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த  10வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

2 இன்னிங்ஸ்களிலுமே நெருக்கடியான சூழலில் இறங்கி அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே, தன்னை புறக்கணிக்க முடியாத அளவிற்கு அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.

முதல் டெஸ்ட் போட்டி நாளை(நவ.,29) முடியவுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் ஆடாத கேப்டன் விராட் கோலி, 2வது டெஸ்ட்டில் ஆடுகிறார். எனவே விராட் கோலி ஆடினால், யார் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

புஜாரா, ரஹானே ஆகிய இருவருமே அண்மைக்காலமாக படுமோசமாக ஆடிவருகின்றனர். ஆனால் அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயரோ அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

ஆனாலும் 2வது டெஸ்ட்டில், விராட் கோலி அணிக்குள் வருவதால், ஷ்ரேயாஸ் ஐயர் தான் நீக்கப்படுவார் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், இது மிகவும் கடினமான தேர்வாக இருக்கப்போகிறது. இக்கட்டான சூழலில் இருந்து இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். விராட் கோலி அணிக்குள் வருவதால் கண்டிப்பாக அணி தேர்வு கடினமாகத்தான் இருக்கப்போகிறது. 

ரஹானேவும் புஜாராவும் நல்ல ஃபார்மில் இல்லை. குறிப்பாக ரஹானே ஃபார்மில் இல்லை என்றாலும், மும்பை டெஸ்ட்டில் அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு அளிக்கப்படும். ராகுல் டிராவிட்டும், விராட் கோலியும் ரஹானேவை கண்டிப்பாக ஒதுக்கமாட்டார்கள். எனவே, அறிமுக டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடியும் துரதிர்ஷ்டவசமாக ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார் என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

click me!